/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியுரிமை சட்டம் தவறாக சித்தரிக்கப்படுகிறது
/
குடியுரிமை சட்டம் தவறாக சித்தரிக்கப்படுகிறது
ADDED : மார் 13, 2024 12:02 AM
புதுச்சேரி : குடியுரிமை சட்டம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்ட காக்கிநாடா, கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழா மற்றும் பிரதமரின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரயில் நிலையத்தில் அரங்கு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொடி அசைத்து ரயிலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை, ரயில்வே துறை அதிகாரிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கவர்னர் தமிழிசை கூறியதாவது; காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தோம். இப்போது புதுச்சேரியில் இருந்து ஏனாம் செல்லலாம்.
ஒரே நாளில் இத்தனை ரயில் திட்டங்கள் நமக்கு கிடைத்தது இல்லை. ரயில் திட்டங்கள் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இணைப்பு இன்னும் அதிகமாகும்.
அதன் மூலம் வியாபாரம், தொழில், கல்வி, பொருளாதாரம் வளர்ச்சிகளுக்கு பயனாக இருக்கும்.
காக்கிநாடா எக்ஸ்பிரஸ் இங்கிருந்து செங்கல்பட்டு, ஏனாமிற்கு நேரடியாக செல்லும். குடியுரிமை சட்டம் நம் நாட்டிற்கு தேவையான சட்டம்.
இது யாருடைய குடியுரிமையும் நீக்கவில்லை; மாறாக சேர்க்கப்பட இருக்கிறது. மதத்திற்கு இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என கூறினார்.
கவர்னர் ஆட்டோ பயணம்
ரயில் நிலைய நுழைவு வாயில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் விழா மேடை இருந்தது. கவர்னர் தமிழிசைக்கு காலில் வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், விழா முடிந்து திரும்பும்போது ஆட்டோவில் புறப்பட்டார். இதற்காக வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றை போலீசார் ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்தனர்.
அப்போது, பள்ளி மாணவிகளையும் தன்னுடன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கவர்னர் புறப்பட்டார்.

