என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே மோதல் முற்றுகிறது:இலாகா ஒதுக்கீட்டில் தொடரும் இழுபறி
என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே மோதல் முற்றுகிறது:இலாகா ஒதுக்கீட்டில் தொடரும் இழுபறி
UPDATED : ஜூலை 27, 2026 08:40 PM
ADDED : ஜூலை 27, 2026 08:31 PM
புதுச்சேரி: அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில், என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணியில் முட்டல், மோதல் நாளுக்கு நாள் முற்றிவருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 16வது சட்டசபை தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள், கடந்த மே 4ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணியை சேர்ந்த என்.ஆர்.காங்.,-12; பா.ஜ., 4; அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ., கடந்த முறை போன்றே சபாநாயகர், 2 அமைச்சர்கள் மற்றும் கூடுதலாக துணை முதல்வர் பதவி பெற முயற்சித்தது. ஆனால், கூட்டணியின் தலைவரான ரங்கசாமி, கடந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றீர்கள். ஆனால், இம்முறை 4 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளீர்கள். மேலும், கடந்த முறை நாங்கள் 10 தொகுதியில் வெற்றி பெற்றோம் .
தற்போது 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், எங்கள் கட்சிக்கு கூடுதல் பதவி வழங்க வேண்டியுள்ளது என்றார். நீண்ட இழுபறிக்கு பின் கடந்த மே 13ம் தேதி முதல்வராக ரங்கசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியேற்றனர். ஆனால், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து பா.ஜ., - என்.ஆர்.காங்., கட்சியிடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், 33 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 17ம் தேதி என்.ஆர்.காங்., ராஜவேல், சிவக்கொழுந்து, பா.ஜ., ராஜசேகர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அன்றே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இலாகா ஒதுக்கப்படாததால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் காரணமாக இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யாமல், நிர்வாக செலவினங்களுக்காக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதனால், அதற்கு முன்பாக சபாநாயகர் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
சபாநாயகர் பதவிக்கு, பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளிடையே கடும் போட்டா போட்டி நிலவி வருவதால், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் சிக்கல் நிலவி வந்தது. நீண்ட இழுபறிக்கு பின், சபாநாயகர் பதவி பங்கீட்டில் இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், 68 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை கடந்த 20ம் தேதி கவர்னரிடம் வழங்கினார்.
கடந்த காலங்களில், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பட்டியலை கவர்னரிடம், முதல்வர் கொடுத்த 2 அல்லது 3 மணி நேரத்தில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று அறிவிப்பு வெளியாகும். ஆனால், இம்முறை, பட்டியல் கொடுத்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதுவரை கவர்னர் மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கு காரணம், பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை, தொழில் உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் கொடுத்த பட்டியலில், எதிர்பார்த்த இலாகாக்கள் இல்லாததால், அன்று இரவே அமைச்சர் நமச்சிவாயம், முதல்வரை வீட்டில் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனாலும், முதல்வர் இலாகா பட்டியலை மாற்ற மறுத்துவிட்டார்.
இதன் மூலம், அமைச்சரவை மற்றும் இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ.,விடையே நீறு பூத்த நெருப்பாக இருந்த மோதல் முற்றியுள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
