/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் பதவியை பறித்த பவழ வர்த்தகம்
/
கவர்னர் பதவியை பறித்த பவழ வர்த்தகம்
ADDED : மே 03, 2025 10:35 PM
பிரெஞ்சியர் காலத்தில் புதுச்சேரி நெசவு தொழிலில் கோலோச்சி, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை வரலாற்று பக்கத்தில் காண முடிகிறது. அதேவேளையில் பிரெஞ்சு கம்பெனியினர் வர்த்தகத்தில் சிறந்து விளங்கியதோடு பெரும் அளவில் பொருட் செல்வம் திரட்டி தங்களது நாட்டிற்கு கப்பல்களில் கொண்டு சென்றனர்.
குறிப்பாக, புதுச்சேரியில் பவழ வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரிய அளவில் லாபம் பார்த்துள்ளத்தையும் காண முடிகிறது. அதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் மன்னர்கள், வியாபாரிகளிடம் பவழத்தை விற்று லாபம் பார்த்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பவழத்தை முதலில் கோட்டை கிடங்கில் பலத்த பாதுகாப்பாக வைத்து, பின்னர் அதனை சிறுக, சிறுக பவழக்காரர்களுக்கு விற்றுள்ளனர்.
இருப்பினும் பவழக்காரர்கள், சிறு வியாபாரிகள் பெரிய துபாசி வழியாக தான் அவர்கள் பவழத்தை வாங்க முடியும். கவர்னர் நேரடியாக பவழ வியாபாரத்தில் ஈடுபட்டது தான் அதற்கு காரணம்.
கவர்னர் நேரடியாக பவழத்தை விற்காமல், துபாசிகளை பெரிதும் நம்பி இருந்துள்ளனர். துபாசி என்றால் மொழி பெயர்ப்பாளர்கள் என்று அர்த்தம். பல மொழிகள் தெரிந்த இவர்கள் கவர்னர்களுடன் நெருங்கி தொடர்பில் நிழலாகவே இருந்தனர். இதனால் அவர்களிடம் பவழ வர்த்தகம் ஒப்படைக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை.
இந்த பவழ வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு கவர்னர்களின் பெயர்கள் புதுச்சேரி வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. ஒருவர் எபேர், மற்றொருவர் லெனுவார். புதுச்சேரியில் பெரிய துபாசியின் வீழ்ச்சிக்கும், ஒரு கவர்னர் பதவி பறிபோவதற்கு கூட பவழ வியாபாரம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
1708-1715 காலக்கட்டத்தில் கோலோச்சிய பிரெஞ்சு கவர்னர் எபேர், ஒரு முறை பவழத்தை நல்ல விலைக்கு விற்று தருமாறு பெரிய துபாசி முத்தியப்ப முதலியாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவரால் விற்று தர முடிவில்லை.
ஆனால் அதே நேரத்தில் துணை துபாசி நயினியப்பபிள்ளை கவர்னர் விரும்பியதுபோல் நல்ல ஆதாயத்திற்கு விற்று தந்துள்ளார். இதன் விளைவு முத்தியப்ப முதலியார் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இடத்தில் நயினிப்பிள்ளை நியமிக்கப்பட்டார். அவர் திறமையாவனர், நாணயமானவர் என்று கவர்னர் எபேர் புகழாரம் சூட்டினார்.
கவர்னர் மீண்டும் ஒருமுறை பவழம் விற்றுத்தர கேட்ட போது நயினியப்பபிள்ளை தம் இயலாமையை வெளிப்படுத்தினார். இதனால் கவர்னர் நயினிப்பிள்ளை மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தார்.
அங்கேயே அவர் இறந்து போனார், பின்னர் பிரான்ஸ் நீதிமன்றம் நயினியப்பபிள்ளை நிரபராதி என தீர்ப்பளித்தது. கவர்னர் எபேருக்கு தண்டனை கிடைத்தது. பதவி நீக்கம் செய்யப்பட்டு, பிரான்ஸ்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பவழ வியாபாரம் படுத்தது. அடுத்து வந்த கவர்னர் லெனுவார் வழக்கம்போல் பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வியாபாரமான பவழத்தை விற்றார். இவர் காலத்தில் தலைமை தரகராக இருந்தவர் கனகராய முதலியார். ஆனால் இவர் வழியாக பவழத்தை விற்காமல் ஆனந்த ரங்கப்பிள்ளையிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தார் கவர்னர் லெனுவார். அதற்கு, அவரது வர்த்தக திறமை தான் முக்கிய காரணம். எதிர்பார்த்தை போன்றே 1734ல் 48 பவழ பெட்டிகளை ஆனந்த ரங்கப்பிள்ளை விற்று அதனை அரசு கஜானாவில் சேர்த்தார்.
அந்த அளவிற்கு பிரெஞ்சு ஆட்சியில் பவழ வர்த்தகம் முக்கியத்துவம் பெற்று ஆட்சியில் எதிரொலித்து பதவிகளையும் பறித்துள்ளது.