/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலிப்பு
/
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலிப்பு
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலிப்பு
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலிப்பு
ADDED : ஆக 28, 2025 02:08 AM

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
5:00 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், உற்சவ மூர்த்தி அமெரிக்கா டாலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். காலை 8:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனி நபர் அர்ச்சனைகள், சிறப்பு தரிசனங்கள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில், சர்வ திவ்ய தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கவர்னர் கைலாஷ்நாதன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், உள்ளிட்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், அனைவருக்கும் லட்டு, கேசரி, விநாயகர் ஆன்மீக பாடல் புத்தகம் வழங்கப்பட்டது.
நடை மதியம் 2:00 மணிக்கு மூடப்பட்டது. பின், மதியம் 3:00 மணிக்கு பூஜைகளுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டு, இரவு 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
இதேபோல், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பத்கர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.