/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சியர்களின் வீரக்கோட்டை பாரதி பூங்காவாக மாறியது
/
பிரெஞ்சியர்களின் வீரக்கோட்டை பாரதி பூங்காவாக மாறியது
பிரெஞ்சியர்களின் வீரக்கோட்டை பாரதி பூங்காவாக மாறியது
பிரெஞ்சியர்களின் வீரக்கோட்டை பாரதி பூங்காவாக மாறியது
ADDED : ஜன 26, 2025 07:02 AM

புதுச்சேரி கவர்னர் மாளிகை எதிரே மரங்கள் அடர்ந்த பூஞ்சோலையாக திகழும் பாரதி பூங்கா அமைந்துள்ள இடம், பிரெஞ்சு போர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. அது அந்த காலத்தில் அரச பூங்காவாகவும் திகழ்ந்துள்ளது.
பிரெஞ்சியர்கள் புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்தினாலும் புதுச்சேரி அடிக்கடி படையெடுப்பினையும் சந்திக்க வேண்டிருந்தது. இதனை கண்ட, பிரான்சுவா மர்த்தேன்,  1689ல் புதுச்சேரியில் பர்லோங் கோட்டையை கட்டி எழுப்பினார்.
ஆனால், 1693ல் டச்சுக்காரர்கள் அதனை  தகர்த்தனர். தொடர்ந்து அவர்,  1706ல் நட்சத்திர வடிவிலான லுாயி கோட்டை பாதுகாப்பாக கட்டி எழுப்பினார். இந்த லுாய் கோட்டைக்கு வடக்கே  ஒரு ஆளுநர் தோட்டமும் உருவாக்கப்பட்டு இருந்தது.
அந்த தோட்டத்தில் கொடிபந்தல் தோட்டமும் ஏற்படுத்தப்பட்டது. கொடி பந்தல் வழியாக பிரெஞ்சியர்கள் பொழுது போக்கி வந்துள்ளனர்.
ஆனால், 1761ல் பிரெஞ்சியர்கள் இந்த கோட்டையை தகர்த்தனர். அதை தொடர்ந்து, பாரீஸ் இரண்டாவது ஒப்பந்தத்தின்படி, 1816ல் புதுச்சேரி பிரெஞ்சியர்களுக்கு திரும்ப கிடைத்தது. ஆனால் எந்த கோட்டையும் எழுப்ப கூடாது என்று நிபந்தனை இருந்ததால், கோட்டை இருந்த இடம் இடிக்கப்பட்டது. அந்த இடம் சமன்படுத்தி, போர் வீரர்கள் பயிற்சி இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையில் 1820ல் ஸ்பினாஸ் என்ற திடலின் மைய பகுதியில் ஒரு நீரூற்று ஏற்படுத்தி அரச பூங்காவாக மாற்றப்பட்டது. துய்ப்ராய் வாழ்ந்த 1857-63ம் ஆண்டு கால கட்டத்தில்,  லமெரேஸ் என்ற பொறியாளர் மூலம் முத்திரையர்பாளையத்தில் இருந்த தண்ணீர் திடலின் மைய பகுதிக்கு கொண்டு வந்து, நீருற்று அமைக்கப்பட்டது.
அந்த நீரூற்றை மையமாக கொண்டு 1866ல் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது. 1945ல் அந்த இடம் முழுவதுமாக மீண்டும் சமன்படுத்தி, பூங்காவாக சீர்திருத்தப்பட்டன. செஞ்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கற்கள் சிலைகள் பூங்காவில் அங்காங்கே வைத்து அழகுப்படுத்தப்பட்டன. அப்போது அப்பூங்கா ழெனேரால் தெகோல் பூங்கா என்ற பெயரில் அழைக்கப் பட்டது.
நீண்ட காலத்திற்கு பூங்காவின் மைய பகுதியில் இருந்த மண்டபம், நீரூற்று என்று குறிப்பிடாமல் பிளாஸ் ஷார்ல் தெகோல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
தற்போது, முண்டாசு கவிஞன் பெயரை தாங்கி, இயற்கை எழில் கொஞ்சும் பாரதி பூங்காவாக மாறி, உள்ளே வரும் பொதுமக்களையும், குழந்தைகளையும்  உற்சாகப்படுத்தி புத்துணர்ச்சியுடன் திருப்பி அனுப்பி வருகிறது.

