ADDED : ஆக 13, 2026 04:11 PM
வீராம்பட்டினத்தில், செங்கழுநீரம்மனைத் தவிர ஊரின் 4 திசைகளிலும் எல்லை தெய்வங்களாகவும், குலதெய்வங்களாகவும் எண்ணற்ற கோவில்கள் அமைந்து கிராம மக்களைக் காத்து வருகின்றன.
காக்கையன்தோப்பு விநாயகர் கோவில் வீராம்பட்டினத்தின் சின்ன ஓடைப் பகுதியில் அமைந்திருந்த விநாயகரை, ஊர் பஞ்சாயத்தாரும் மக்களும் கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் தோப்புகள் அழிந்து வீடுகளும் சாலைகளும் வரத் தொடங்கியதும், காக்கையன்தோப்புப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக விநாயகருக்கு கோவில் அமைத்து, நித்திய பூஜைகளுடன் வழிபட்டு வருகின்றனர்.
காவல் தெய்வம் வீரன் கோவில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறை தலைமுறையாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வமாக வீரன் வீற்றிருக்கிறார். மதுரை வீரன், தாழங்காட்டான், ஈஸ்வரன், முனீஸ்வரன் எனப் பல திருநாமங்களால் அழைக்கப்படும் இந்த அய்யனுக்கு, ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமைக்குப் பின் வரும் திங்கட்கிழமையில் மக்கள் திரளாகக் கூடி சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
எல்லை காக்கும் பெரியாண்டவர் கோவில் வீராம்பட்டினத்தின் தெற்குப் பகுதியில் முந்திரித் தோப்பு, சவுக்கு தோப்பு பகுதியில் வெட்டவெளியில் இருந்த பெரியாண்டவருக்கு, பிரான்ஸிலிருந்து வந்த தம்மாம் வீடு முருகையன் சிறிய கோவில் கட்டினார். அவருக்குப் பின் பொற்கலை பராமரித்த இக்கோவிலை, தற்போது ஆனந்தன் முழுமையான கோவிலாகக் கட்டி சிலை பிரதிஷ்டை செய்துள்ளார். தெற்குப் பகுதி மக்கள் சாராயம், மீன், கருவாடு படைத்துத் தங்கள் காவல் தெய்வத்தை உணர்வுப்பூர்வமாக வழிபடுகின்றனர்.
பாரம்பரியம் பேசும் இருசாத்தம்மன் கோவில் செங்கழுநீரம்மன் கோவிலின் தென்மேற்கே பவானி நகரில் உள்ளது இருசாத்தம்மன் கோவில். பல குடும்பங்களுக்கு குலதெய்வம். தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், இருசாத்தம்மனை வழிபட்ட பிறகே தொடங்குகின்றனர்.
நாகூரார் கோவில் கடற்கரையோர சவுக்குத் தோப்பில் பச்சைக்கொடி பறக்க அமைந்திருந்த நாகூரார் தோட்டம், மீனவ மக்களின் பெரும் நம்பிக்கை ஸ்தலம். ஆழ்கடலுக்குக் கோலா மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அல்லாவே நீயே துணை என வேண்டிக்கொண்டு பொரி, அவல், கடலை படைத்து வழிபட்டுச் செல்வர். தற்போது அப்பகுதியில் இஸ்லாமியர்கள் அழகான மசூதி கட்டி தொழுகை நடத்தி வருகின்றனர். இதன் தெற்கே தில்லை நாச்சியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
நாகலிங்கேஸ்வரன் கோவில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளி அருகே, முற்காலத்தில் முந்திரி தோப்புக்குள் அமைந்திருந்த லிங்கத்தைச் சுற்றி நாகம் குடிகொண்டிருந்தது. பிரமசிவம் என்ற முனிசாமி தன் சொந்த செலவில் இக்கோவிலைக் கட்டி, நாகலிங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
அய்யனார் கோவில் செங்கழுநீரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் தரிசிக்கும் ஸ்தலம் இது. பழமைவாய்ந்த இக்கோவிலில்தான், கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து, இருமுடி கட்டி தங்களின் விரதத்தைத் தொடங்குகிறார்கள்.
வடக்கை காக்கும் முனீஸ்வரர் ஊரின் வடக்கே அரசு சமுதாய கூடம் அருகே பழனி, தணிகைவேல் ஆகியோரால் முனீஸ்வரன் கோவில் கட்டப்பட்டுப் பூஜை நடக்கிறது. மேலும், பனைமரத்தின் கீழ் செங்கல் வைத்து வழிபடப்பட்ட வடக்குப் பகுதி பெரியாண்டவருக்கு, ஆடி மாதம் 3வது வெள்ளியில் விமர்சையாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பிச்சைவரத்தான் கோவில் தெற்கே கடற்கரையோரச் சவுக்குத் தோப்பில் அமைந்திருக்கும் பிச்சைவரத்தான் கோவில், குப்புசாமி நாட்டாரின் குலதெய்வத் தலமாகும். செங்கழுநீர் அம்மன் தேவஸ்தானத்தின் பழங்காலப் பூசாரிகளான இவர்களின் பரம்பரை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் குடும்பத்தோடு வந்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
இப்படித் திசைக்கொரு தெய்வங்களாக வரலாற்று அற்புதமுமாக வீராம்பட்டினம் தன் ஆன்மிகக் கம்பீரத்தை உலகிற்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது
