மாநில உள்கட்டமைப்பு வளர்ச்சியை மாற்றிக்க முதன்மை திட்டம்:தீவிர கள ஆய்வில் இறங்கியது புதுச்சேரி அரசு
மாநில உள்கட்டமைப்பு வளர்ச்சியை மாற்றிக்க முதன்மை திட்டம்:தீவிர கள ஆய்வில் இறங்கியது புதுச்சேரி அரசு
UPDATED : செப் 06, 2026 06:05 PM
ADDED : செப் 06, 2026 06:00 PM

புதுச்சேரி: புதுச்சேரியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்புத் தேவைகளை எதிர்கால நோக்குடனும், பூர்த்தி செய்யும் வகையில், விரிவான முதன்மை உள்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான ரூ.14,300 கோடி பட்ஜெட் திட்டத்தில், பெரும்பாலான நிதி அரசின் தவிர்க்க முடியாத கட்டாயச் செலவினங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.2,693.40 கோடியும் (18.83 சதவீதம்), ஓய்வூதியத்திற்காக ரூ.1,619.73 கோடியும் (11.33 சதவீதம்), வாங்கிய கடன் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்காக ரூ.1,981.57 கோடியும் (13.86 சதவீதம்), மின்சாரக் கொள்முதலுக்காக ரூ.2,327.86 கோடியும் (16.28சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், மீனவர் ஓய்வூதியம், மகளிருக்கான நிதியுதவி, இலவச அரிசி-கோதுமை, மாணவர் மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.2,202.45 கோடி (15.40 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது. மகளிர், இளைஞர் மற்றும் பசுமை மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.3,070.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு தனது நிதியில் கணிசமான பகுதியைச் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்களுக்குச் செலவிடுவதால், பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுந்தது.
இக்குறைபாட்டைப் போக்கி, மாநிலத்தின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், புதுச்சேரி அரசு முதன்முறையாக இந்த விரிவான முதன்மை உள்கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்க முன்வந்துள்ளது.
நகர்ப்புற வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் பல்வேறு துறைகள் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. நெரிசலைக் குறைக்கும் வகையில் நவீன சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்:: குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகளைச் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சுற்றுலா மற்றும் பாரம்பரியம்:: புதுச்சேரியின் தொன்மையான பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாத்தல், உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்கள் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள்:: நிலத்தடி தொலைத்தொடர்பு மற்றும் மின்சார வழித்தடங்களை முறைப்படுத்த ஆய்வு செய்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டமிடலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆலோசனைக் குழுக்கள் மற்றும் வல்லுநர்களின் உதவியுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, தற்காலிகத் தீர்வுகளுக்குப் பதிலாக, அடுத்த பல தசாப்த காலத் தேவைகளைக் கருத்தில் கொண்ட நிரந்தர உள்கட்டமைப்பு வசதிகள் புதுச்சேரிக்குக் கிடைக்கும். இது புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டிற்கும் பெரும் துாணாக அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
