நடைபாதைகள், பள்ளி மண்டலங்களில் புதிய கட்டுப்பாடு:மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி திருத்தம்
நடைபாதைகள், பள்ளி மண்டலங்களில் புதிய கட்டுப்பாடு:மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி திருத்தம்
UPDATED : செப் 29, 2026 08:17 PM
ADDED : செப் 29, 2026 08:12 PM

புதுச்சேரி: நடைபாதைகள் பள்ளி மண்டலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து போக்குவரத்து துறை புதிய திருத்தங்களை அறிவித்துள்ளது.
புதுச்சேரி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. வாகனங்கள் நத்தைவேகத்தில் செல்வது ஒருபுறம் இருக்க பாதசாரிகள் சாலையை கடக்க முடியவில்லை. குறிப்பாக முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் சிக்னலை கடக்க முடியவில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி போக்குவரத்து துறை, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
இத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்: பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய விரிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நடைபாதைகள் சொரசொரப்பான தரைத்தளத்துடன், சக்கர நாற்காலிகள் எளிதில் சென்று வரக்கூடிய தொடர்ச்சியான அமைப்பாக இருக்க வேண்டும். பராமரிப்பு அல்லது கட்டுமானப் பணிகள் நடக்கும் போது பாதசாரிகளுக்குக் குறைந்தபட்சம் 1.5 மீட்டர் அகலம் கொண்ட மாற்று வழி அமைத்துக் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பாதசாரிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் 150 மீட்டருக்கு ஒருமுறை பாதசாரி கடக்கும் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கைப்பிடிச் சுவர்கள் மற்றும் சாய்வுப் பாதைகளில் பிரெயில் அடையாளங்கள் இடம்பெற வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி மண்டலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சாலைகளில் வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 25 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளை ஒட்டிய பள்ளிகளில் சிறப்புப் பாதுகாப்பு அமைப்புகளுடன் அதிகபட்சமாக 40 கி.மீ., வரை வேக வரம்பு அனுமதிக்கப்படும்.
மேலும், பள்ளி மண்டலத்திற்கு முன் 500 மீட்டரிலிருந்தே எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். பள்ளிப் பகுதிகளில் நடைபாதையின் அகலம் குறைந்தபட்சம் 2.5 மீட்டராக இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
சைக்கிள் ட்ராக்:: சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தான சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தனி நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் சைக்கிள் வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய சைக்கிள் விற்பனை செய்யப்படும் போதே, அவற்றில் முன் மற்றும் பின் பிரதிபலிப்பான்கள், சக்கரப் பிரதிபலிப்பான்கள், பெல் மற்றும் ஹெல்மெட் ஆகியவை வழங்கப்படுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இயக்கப்படும் சைக்கிள்களில் முன் வெள்ளை விளக்கும், பின் சிவப்பு விளக்கும் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும். மோட்டார் வாகன ஓட்டுநர்கள் சைக்கிள்களை முந்திச் செல்லும்போது குறைந்தபட்சம் 1.5 மீட்டர் பக்கவாட்டு இடைவெளி விட்டுச் செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் சாலையை கடக்கும் இடங்களில் ஓட்டுநர்கள் வேகத்தை குறைத்து அவர்களுக்குச் சாலையைப் பயன்படுத்தும் முதன்மை உரிமையை வழங்க வேண்டும்.
நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் மோட்டார் வாகனங்களை இயக்குவதோ அல்லது நிறுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிபிடி:: சாலை உள்கட்டமைப்புக் குறைபாடு அல்லது விதிமீறல்களால் விபத்து, மரணம் ஏற்பட்டால், விசாரணைக்குப்பின் சம்பந்தப்பட்ட அரசு முகமை அல்லது ஒப்பந்ததாரருக்கு ரூ. 1,00,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு மாநில சாலை பாதுகாப்பு நிதியத்தில் சேர்க்கப்படும். மேலும் ஒப்பந்தமும் ரத்து செய்யப்படலாம்.
வாகன ஓட்டுநர்கள் அபராதம்: முதல் முறையாக விதிமீறல்களை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம், இரண்டாம் முறை மற்றும் தொடர் விதிமீறல்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நடைபாதையில் வாகனம் நிறுத்துவது போன்ற தொடர் ஆக்கிரமிப்புகளுக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
நடைபாதை ஆக்கிரமிப்புகள், பராமரிப்பின்மை மற்றும் உள்கட்டமைப்புக் குறைபாடுகள் குறித்துப் பொதுமக்கள் நேரடியாகப் புகாரளிக்கத் தனிப் புகார் அதிகாரிகளைச் செயல்படுத்தும் முகமைகள் நியமிக்கப்பட உள்ளது.
புகார்கள் மீது ஆய்வு மேற்கொண்டு 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ தீர்வை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
