/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தள்ளி போகிறது புதிய பஸ் நிலைய திறப்பு விழா
/
தள்ளி போகிறது புதிய பஸ் நிலைய திறப்பு விழா
ADDED : செப் 26, 2024 03:19 AM
புதுச்சேரி : மறைமலையடிகள் சாலையில் புதிய பஸ் நிலையம் செயல்பட்டது.
பெருகி வரும் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடி மதிப்பில், வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.
4.41 ஏக்கர் பரப்பில் லோக்கல் டவுன் பஸ்கள் 22, மினி பஸ்கள் 12, ஆம்னி பஸ்கள் 12 என நிறுத்த தனித்தனி நடைமேடை, ஓட்டல்கள், பயணிகள் காத்திருக்கும் ஏ.சி. அறைகள், ஏ.சி., இல்லாத பயணிகள் காத்திருக்கும் வளாகம், டிக்கெட் புக்கிங் கவுன்டர்கள், லாக்கர் ரூம், போக்குவரத்து துறை அலுவலகம், முதல் உதவி சிகிச்சை மையம், 2 கழிப்பறை வளாகம், ஏ.டி.எம்., பயணிகள் தங்கும் விடுதிகள், 31 கடைகள் கட்டும் பணி நடக்கிறது.
இதுதவிர கார், பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி, ஏ.எப்.டி., மைதானம் தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டது.
இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், வரும் அக். 2ம் தேதி, புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.
தற்போது புரட்டாசி மாதம் நடப்பதால், திறப்பு விழா நடத்த அரசிடம் தேதி கிடைக்கவில்லை. புரட்டாசி மாதம் முடிந்து தேய்பிறை.
அதனால், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அமாவாசைக்கு பிறகு பஸ் நிலையம் திறப்பு விழா நடத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.