ADDED : ஆக 28, 2026 08:13 PM
பாகூர் ஆக. 29–: சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 55; வீடு வீடாகச் சென்று காஸ் அடுப்பு சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி கிருமாம்பாக்கம் கிராமத்திற்கு, காஸ் அடுப்பு சர்வீஸ் செய்வதற்காக சென்றார். மாலை அங்குள்ள கருமாதி கொட்டையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது, இவரை போல், ஊர் ஊராக சென்று காஸ் அடுப்பு, குழவிக்கல் வியாபாரம் செய்து வரும் கடலுார், வண்டிபாளையத்தை சேர்ந்த மாணிக்கம், அவரது மனைவி வள்ளி மற்றும் ஒருவர் அந்த கருமாதி கொட்டகையில் தஞ்சமடைந்துள்ளனர்.
அன்று மாலை, சங்கர் துாங்கி கொண்டிருந்த போது, அவருடைய பொருள் ஒன்றை மாணிக்கம் எடுத்துள்ளார். இது குறித்து, சங்கர் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அன்று இரவு சங்கர் கருமாதி கொட்டகையில் படுத்து துாங்கியபோது, மாணிக்கம் உள்ளிட்டோர் சங்கரை கொடூரமாக தாக்கினார். படுகாயமடைந்த சங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா வழக்கு பதிந்து, மாணிக்கும், அவரது மனைவி வள்ளி உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
