/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி தொல்லியல் துறை மெத்தனத்தால் பக்தர்கள் அதிருப்தி
/
மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி தொல்லியல் துறை மெத்தனத்தால் பக்தர்கள் அதிருப்தி
மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி தொல்லியல் துறை மெத்தனத்தால் பக்தர்கள் அதிருப்தி
மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி தொல்லியல் துறை மெத்தனத்தால் பக்தர்கள் அதிருப்தி
ADDED : அக் 23, 2024 05:43 AM

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நடராஜர் மண்டபத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதால், அதன் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையாக பராமரிக்காமல் சேதமடைந்து வந்தது.
இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2014 ஆண்டு புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு, 2017ம் ஆண்டு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது.
புனரமைப்பு பணிகள் சரிவர செய்யப்படாத நிலையில், கோவிலுக்குள் தேங்கும் மழை நீரால், தரையில் பாசி பிடிப்பதால், கோவிலை வலம் வரும் பக்தர்கள் வழுக்கி விழுகின்றனர். மூலவர் மண்டபம், அர்த்த மண்டபத்தில் மேல் தளம் மற்றும் சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அதன் வழியாக மழை நீர் கசிந்து வருகிறது.
குறிப்பாக, நடராஜர் மண்டபம் மற்றும் அதனையொட்டி வெளிப்புறமாக அமைந்துள்ள கடைகளின் மேல் தளம், பக்கவாட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், அதன் உள்ளே வைத்துள்ள பழமை வாய்ந்த சிலைகள், வீதியுலா வாகனங்களும் சேதமாகும் நிலை உள்ளது. நடராஜர் மண்டபத்தின் உள்ளேயும், வெளியே உள்ள கடைகளிலும் இரும்பு பைப்புகள் கொண்டு மேல் தளத்தை முட்டு கொடுத்து வைத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்த இக்கோவிலை தொல்லியல் துறை உயர் அதிகாரிகள், எட்டிக்கூட பார்ப்பது கிடையாது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரி அரசால் இக்கோவிலில் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறை, பாகூர் மூலநாதர் கோவிலை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.