புதுச்சேரி சட்டசபையில் அடியெடுத்து வைக்க இதுவே தருணம்: திருமாவளவன்
புதுச்சேரி சட்டசபையில் அடியெடுத்து வைக்க இதுவே தருணம்: திருமாவளவன்
ADDED : ஏப் 05, 2026 06:09 PM
புதுச்சேரி: 'புதுச்சேரி சட்டசபையில் வி.சி., அடியெடுத்து வைக்க இதுவே சரியான தருணம்' என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.
உழவர்கரை தொகுதியில் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் நமக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என உழவர்கரை தொகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். கடந்த முறை இதே தொகுதியில் 5,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்றோம்.
இந்த முறை கரும்பலகை சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு, வி.சி.,யை சட்டசபையில் அமர வைப்பதோடு, கட்சி டாக்டரேட் வாங்கும் அளவிற்கு வளர்ச்சி பெற உதவும்.
தொகுதி பங்கீட்டில் கால அவகாசம் இல்லாததால் முதலில் 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தோம். ஆனால், காங்., மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மற்ற 3 தொகுதிகளில் பிரசாரத்தை நிறுத்தி விட்டோம்.
அதேபோல், காங்., கட்சியினரும் உழவர்கரையில் வி.சி.,யின் வெற்றிக்காக பணியாற்றுவார்கள் என நம்புகிறேன்.
கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு உரிய இடங்களை வழங்க முடியாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும், அவர்கள் தனித்துப் போட்டியிடுவது கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது.
பாஜ., தேர்தல் அறிக்கையில் புதுச்சேரியின் இலச்சினையை மாற்றப்போவதாக கூறியுள்ளது. இது புதுச்சேரியின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும். புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
