/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணக்கெடுப்பு படிவத்தை திரும்பி கொடுத்தவர்கள்... 89.87 சதவீதம்! சட்டசபை தேர்தலுக்கு மாநில தேர்தல் துறையும் ரெடி
/
கணக்கெடுப்பு படிவத்தை திரும்பி கொடுத்தவர்கள்... 89.87 சதவீதம்! சட்டசபை தேர்தலுக்கு மாநில தேர்தல் துறையும் ரெடி
கணக்கெடுப்பு படிவத்தை திரும்பி கொடுத்தவர்கள்... 89.87 சதவீதம்! சட்டசபை தேர்தலுக்கு மாநில தேர்தல் துறையும் ரெடி
கணக்கெடுப்பு படிவத்தை திரும்பி கொடுத்தவர்கள்... 89.87 சதவீதம்! சட்டசபை தேர்தலுக்கு மாநில தேர்தல் துறையும் ரெடி
UPDATED : ஜன 26, 2026 06:59 AM
ADDED : ஜன 26, 2026 06:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 89.87 சதவீதம் பேர் தேர்தல் துறையில் கணக்கெடுப்பு படிவத்தினை திருப்பி கொடுத்துள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் கொடுத்து விபரங்கள் பெறப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்து திரும்பி கொடுத்தனர். இக்கணக்கெடுப்பு பணிகள் 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 30 வாக்காளர் பதிவு அதிகாரிகள், 30 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் 30 கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் 1099 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டுச்சாவடி முகவர் சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி நிலை முகவர்களின் எண்ணிக்கையை 888-லிருந்து, 2 ஆயிரத்து 729 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும் சம்பந்தப்பட்ட அனைவரின் பங்கேற்பும் உறுதிப்படுத்தப்பட்டது என, தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுச்சாவடி சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், வரிசையை நிர்வாகிக்கவும் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அதிகப்பட்ச 1,200 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1,099 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுச்சாவடியில் நீண்ட நேரமாக வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்.
இவர்கள் எங்க... சிறப்பு தீவிர திருத்த காலத்தில், மரணம், இடம்பெயர்வு, வசிப்பிடத்தில் இல்லாமை பலமுறை பதிவு போன்ற காரணங்களால் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 467 படிவங்கள் சேகரிக்க முடியவில்லை. புதுச்சேரி மாவட்டத்தில் 85 ஆயிரத்து 531 பேர், காரைக்கால் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 936 பேர் அடங்குவர்.
ஓட்டுச்சாவடி வாரியான இந்த பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் பகிரப்பட்டது. வெளிப்படைத்தன்மையையும் அரசியல் சரிபார்ப்பையும் உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் பார்வைக்காகவும் வைக்கப்பட்டன. நீக்கப்பட்ட இவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்களாக என, கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், '2026ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 16ம் தேதி அன்று மக்களிடம் பார்வைக்கு வெளியிடப்பட்டு, அரசியல் கட்சிகளிடம் வழங்கப்பட்டது. கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டு, சேர்ப்பு, திருத்தம், நீக்கம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அறிவிப்பு, விசாரணை மற்றும் மேல்முறையீடு இல்லாமல் எந்த நீக்கமும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஜனவரி 1ம் தேதியன்று அல்லது அதற்கு முன் 18 வயது பூர்த்தி செய்த இளைஞர்கள் படிவம்- 6 மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். இளைஞர் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு பதிவு முகாம்கள் புதுச்சேரி பிரதேசம் முழுவதும் திட்டமிடப்பட்டன.
எந்த ஒரு தகுதியான வாக்காளர்களும் விடுபட்டுவிட கூடாது என்பதில் தேர்தல் துறை அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தியது. அடுத்த மாதம் 14ம் தேதி புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகுபோது நீக்கம் செய்யப்பட்ட முழு வாக்காளர்கள் விபரங்கள் தெரிய வரும்' என்றனர்.

