புதுச்சேரியில் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டம்: ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு
புதுச்சேரியில் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டம்: ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு
UPDATED : ஜூலை 26, 2026 07:10 PM
ADDED : ஜூலை 26, 2026 06:52 PM

புதுச்சேரி: புதுச்சேரி வாஸ்கோ அமைப்பின் 15-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 'போதை பெருட்களுக்கு நோ சொல்வோம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் காலை 7:15 மணிக்கு துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன். அமைச்சர் ராஜவேலு, தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், திவ்யா, எஸ்.பி.,க்கள் ஸ்ருதி, ரட்சனாசிங்சிறப்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலை காந்தி சிலை அருகில துவங்கிய மாரத்தான் ஓட்டம், எஸ்.வி.படேல் சாலை, அண்ணா சாலை, பழை பஸ் ஸ்டாண்ட், சுப்பையா சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையில் காலை 8 மணிக்கு முடிந்தது.
மொத்தம் ஐந்து கி.மீ., துாரம் நடந்த ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூறியதாவது:
மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு நல்ல மனிதர்களாக வாழ வேண்டும். நான் பணிபுரிந்த காலத்தில் கஞ்சா விற்றவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததுடன், அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்தோம். போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது.
புதுச்சேரி சிறிய மாநிலம் அல்ல, முழு இந்தியா. இங்கு பல்வேறு விதமான மக்கள் வாழ்கின்றனர். புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு மொழியை கற்றுக் கொள்ளலாம். மக்கள் அனைத்து நாடுகளிலும் சென்று வாழ வேண்டும். நம்நாட்டில், விளையாட கூடிய அளவில் உடல் வலிமை உள்ளவர்கள் குறைவு. எனவே வருங்காலத்தில், உடல் பலம், ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்' என்றார்.
மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உட்பட பல்வேறு பிரிவுகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் கூறுகையில், 'போதையில்லா பாரதம், போதையில்லா புதுச்சேரியை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு, வாஸ்கோ அமைப்போடு இணைந்து போலீசார் இந்த ஓட்டத்தை நடத்தியுள்ளோம்' என்றார். புதுச்சேரி போலீசில் இருந்து 50 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
