ADDED : ஜூலை 13, 2025 05:44 AM
புதுச்சேரி : போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வீசி, ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூவர், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு வீசி சுப்பு மகன் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜெகன், வெங்கடேஷ், சதிஷ், மதன், நாராயணன், சங்கர் (எ) ஜெய்சங்கர் காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இவர்களில், ஜெகன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வெங்கடேஷ், சதீஷ் ஆகியோர் கடந்தாண்டு உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி விடுதலையாகினர்.
இந்நிலையில், மத்திய அரசின் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கீதா -2023 இன் பிரிவு 473(1) மற்றும் புதுச்சேரி சிறை விதிகள் தண்டனை மறு ஆய்வு வாரிய பரிந்துரையின் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளான மதன், நாராயணன் மற்றும் சங்கர் (எ) ஜெய்சங்கர் ஆகியோரின் தண்டனையின் மீதமுள்ள பகுதியை குறைத்து, முன்கூட்டியே விடுவிக்க கவர்னர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மூவரும் கடந்த 10ம் தேதி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.