/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய திட்டம்: அழிந்து வரும் கடலோர மணற்குன்றுகளை மீட்டெடுக்க... ஊரக வளர்ச்சியுடன், சுற்றுச்சூழல் துறை கைகோர்ப்பு
/
புதிய திட்டம்: அழிந்து வரும் கடலோர மணற்குன்றுகளை மீட்டெடுக்க... ஊரக வளர்ச்சியுடன், சுற்றுச்சூழல் துறை கைகோர்ப்பு
புதிய திட்டம்: அழிந்து வரும் கடலோர மணற்குன்றுகளை மீட்டெடுக்க... ஊரக வளர்ச்சியுடன், சுற்றுச்சூழல் துறை கைகோர்ப்பு
புதிய திட்டம்: அழிந்து வரும் கடலோர மணற்குன்றுகளை மீட்டெடுக்க... ஊரக வளர்ச்சியுடன், சுற்றுச்சூழல் துறை கைகோர்ப்பு
ADDED : பிப் 18, 2025 06:33 AM

புதுச்சேரி: அழிந்து வரும் கடலோர மணற்குன்றுகளை மீட்டெடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
புதுச்சேரியில் கடலோர கிராமங்களில் இயற்கையான உருவான மணல் மேடுகள் நீண்டு பரவி கிடக்கின்றன. இந்த மணல் மேடுகள் மக்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக திகழ்ந்து வருகின்றன.
இந்த இயற்கை மணற்குன்றுகளில் அரிய வகை தாவரங்கள், பறவைகள், ஊர்வனங்களின் வாழ்விடமாக உள்ளன. சுனாமியின் போது இந்த மணற்குன்றுகள் இருந்த இடங்களில் பாதிப்பு குறைவாக இருந்தது.
இயற்கை சூழ்ந்த இந்த மணல்மேடுகள் கடல் அரிப்பு, மனிதனின் தலையீடு காரணமாக படிப்படியாக கரைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் குப்பைகளும் இந்த இயற்கை அரண்களை பொலிவிழக்க செய்கின்றன.
எனவே, கடற்கரை மணல்மேடுகளை மீட்டெடுக்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி துறை அறிவியல் தொழில்நுட்ப சுற்றுசூழல் துறையுடன் இணைந்து முன்னெடுக்க உள்ளன. கடற்கரை மணலுக்கேற்ற தென்னை, பனை, சவுக்கு, முந்திரி, இலந்தை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை வளையத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:
கடற்கரை கிராமங்களில் இயற்கையாக உருவான இந்த மணல் மேடுகளில் மணல் அள்ளக்கூடாது. இவை அந்தந்த கடலோர கிராமங்களில் பாதுகாப்பிற்கு இயற்கை அரணமாக திகழ்ந்து வருகின்றன. அவற்றை காக்கும் வகையில் மணல்மேடு மீட்டெடுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
வடக்கு பகுதியில் கடல் அரிப்பில் கடற்கரை மணல் குன்றுகள் காணாமல்போய் விட்டது. எனவே, எஞ்சியுள்ள தெற்கு கடலோர பகுதியில் வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு, பன்னித்திட்டு, நரம்பை, மூர்த்திக்குப்பம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் மணல்குன்று மீட்டெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பகுதியில் உள்ள மணல்மேடுகளில் மொத்தம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மணற்குன்றுகளில் தாவரங்கள் வளரும்போது மணற்குன்றும் பாதுகாக்கப்படும் என்றார்.
கடற்கரை என்பது பொழுதுபோக்கும் இடம் மட்டும் அல்ல,. நிலப்பரப்பைக் காக்கும் மிகப் பெரிய அரண். கடலுக்கும் நிலப்பரப்புக்கும் இடையேயான கடற்கரை மணல் பரப்பு இல்லாமல் போனால் கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பினால் காணாமல் போகும். இதுபோன்ற சூழ்நிலையில் மணற்குன்று மீட்டெடுப்பு திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

