ADDED : செப் 23, 2026 08:01 PM
பாகூர்: பாகூர் தொகுதி மக்கள் இயக்கம் சார்பில், சேலியமேடு சுங்கச்சாவடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம், பாகூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பாகூர் தொகுதி மக்கள் இயக்க நிறுவன தலைவர் முருகன், கவுரவ தலைவர் ஆனந்தன், தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சேலியமேடு சுங்கச்சாவடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். சுத்தமான கழிப்பிடம், ரெக்கவரி வாகனம், ஆம்புலன்ஸ் வசதி, பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் குறுகிய பாதை அகல்படுத்திட வேண்டும்.
உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில், அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
