/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரம்பரிய விளையாட்டு; களை கட்டியது புதுச்சேரி
/
பாரம்பரிய விளையாட்டு; களை கட்டியது புதுச்சேரி
ADDED : ஏப் 07, 2025 06:21 AM

புதுச்சேரி; புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதி பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகள் ஆர்வமாக விளையாடி மகிழ்ந்தனர்.
இன்றைய குழந்தைகளை விளையாட சொன்னால் உடனே மொபைல்போன்களை எடுத்துக் கொள்கின்றனர். அடுத்த நொடியே மொபைல்போன் கேம்களில் மூழ்கி விடுகின்றனர்.
வெளியே விளையாட செல்வதில்லை. நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளும் அவர்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக நகர குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை.
எனவே நகர குழந்தை களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, நமது கலாசார பெருமைகளை புரிய வைக்க, புதுச்சேரியில் பாரம்பரிய திருவிழா கடந்த 2015ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கட்டடக்கலை வல்லுநர்கள் சுகுனா 37, ஆனந்தி, 32, ஆகியோர் இதனை நடத்தி வருகின்றனர். ஒவ் வொரு ஆண்டும் புதுச்சேரி நகர பகுதியில் ஒரு வீதியை தேர்ந்தெடுத்து அந்த வீதியில் பாரம்பரிய விளையாட்டு திருவிழாவாக முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று ஈஸ்வரன் கோவில் வீதியில் புதுச்சேரி பாரம்பரிய திருவிழா நடந்தது.
பல்லாங்குழி, கோலிகுண்டு, கண்ணாடி வளையல், பம்பரம், சுங்கரகா, டையர் ஓட்டுதல், ஊஞ்சல் என பல வகையான பாரம்பரிய விளையாட்டுகளால் அவ்வீதி களைகட்டியது.
ஒவ்வொரு பாரம்பரிய விளையாட்டுகளின் விதிமுறைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து விளையாட அழைக்கப்பட்டனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சி துள்ளலுக்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு விளையாட்டுகளையும் போட்டிக்போட்டு விளையாடி மகிழ்ந்தனர். அந்த நிகழ்வினை தாய், தந்தை, தாத்தா, பாட்டி, உறவினர்கள் மொபைல்போனில் புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்தினர்.
கண்ணாபூச்சி விளையாடிய குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தபோது, மொபைல் போன்களில் கேம்களை விளையாடுவோம். இதுவும் அதுபோல் தான் ஜாலியாக தான் இருக்கு என்றபடி மீண்டும் கண்ணாம்பூச்சி விளையாட சிட்டாக பறந்தனர். கண்ணாமூச்சி.. ரே.. ரே.. கண்டுபுடி யாரே....என்று குழந்தைகள் விளையாட அந்த இடமே உற்சாகமாக காட்சியளித்தது. விளையாட்டில் பங்கேற்ற சிறுவர்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பாரம்பரிய விளையாட்டினை ஒருங்கிணைந்த சுகுனா கூறுகையில், 'நமது பாரம்பரிய விளையாட்டுகள் பல காணாமல் போய்விட்டன. எஞ்சி இருக்கும் ஒருசில விளையாட்டு களையாவது இன்றைய தலைமுறையினருக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை துவங்கியுள்ளோம். தொடர்ந்து அனைவரது ஒத்துழைப்புடன் பாரம்பரிய விளையாட்டினை மீட்டெடுப்போம்' என்றார்.

