/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் 'டிராபிக்ஜாம்' போக்குவரத்து போலீசார் இல்லாததால் மக்கள் கடும் அவதி
/
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் 'டிராபிக்ஜாம்' போக்குவரத்து போலீசார் இல்லாததால் மக்கள் கடும் அவதி
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் 'டிராபிக்ஜாம்' போக்குவரத்து போலீசார் இல்லாததால் மக்கள் கடும் அவதி
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் 'டிராபிக்ஜாம்' போக்குவரத்து போலீசார் இல்லாததால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜன 23, 2026 05:37 AM

புதுச்சேரி: போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், கோரிமேடு சாலையில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
புதுச்சேரி என்றால் அமைதி என்ற நிலை மாறி, தற்போது 'டிராபிக்' நகரமாகி விட்டது. அந்தளவிற்கு வாகனங்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப சாலை விரிவாக்கம் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், புதுச்சேரி நகர மக்கள் அனுபவிக்கும் நரக வேதனைக்கு அளவே இல்லை. சிக்னல்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் பணியில் இருந்தலே ஒரு சிக்னலை கடக்க 10 முதல் 15 நிமிடங்களாகி விடுகிறது.
இந்நிலையில், ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு சாலையில் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயில் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது. காரணம், இ.சி.ஆரில் இருந்து கோரிமேட்டிற்கு செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளும், கோரிமேட்டில் இருந்து லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், ராஜிவ் சிக்னலை தவிர்ப்பதற்காக, தட்டஞ்சாவடி தொழிற்பேட்டையில் நுழைந்து குறுக்கு வழியாக செல்கின்றனர்.
இதனால், ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு சாலையில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாகிவிட்டது.
இதனை தவிர்க்க தொழிற்பேட்டை நுழைவு வாயில் சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், இந்த சந்திப்பில் நேற்று காலை போலீசார் பணியில் இல்லை. இதனால், காலை 8:30 மணிக்கு கோரிமேட்டில் இருந்து நகரை நோக்கி சென்ற வாகனங்களும், ராஜிவ் சதுக்கத்தில் இருந்து தொழிற்பேட்டைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மற்றும் இ.சி.ஆரில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக கோரிமேடு சாலைக்கு வந்த வாகனங்களும் ஒரே நேரத்தில் செல்ல முயன்றதால் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
இதனால், ராஜிவ் சிக்னலில் இருந்து வந்த வாகனங்கள் கோரிமேடு சாலையில் தொடர்ந்து செல்ல முடியாமல் ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் செய்வதறியாமல் தவித்தனர்.
இந்நிலையில், கடற்கரையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பிய போலீஸ்காரர், தட்டாஞ்சாவடி தொழிற்போட்டை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
உடன் அவர், இறங்கி வந்து தொழிற்பேட்டை சந்திப்பிற்கு சென்று, அங்கு முட்டி மோதிக் கொண்டிருந்த வாகனங்களை முறைப்படுத்தி 20 நிமிட போராட்டத்திற்கு பின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
முதல்வர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., உயர் அதிகாரிகள் தினசரி செல்லும் கோரிமேடு சாலையில் உள்ள பிரதான சாலையில் போலீசார் பணியில் இல்லாது, அத்துறையின் மெத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
இனியேனும், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பணியில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்திட வேண்டும்.

