இந்திரா சிக்னலில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
இந்திரா சிக்னலில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
UPDATED : நவ 10, 2026 09:29 PM
ADDED : நவ 10, 2026 09:24 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சிக்னல்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. இதற்கு சாலையோர ஆக்கிரமிப்புகள், சாலையில் மாதக்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்கள், தாறுமாறான பார்க்கிங், போதிய போக்குவரத்து மேலாண்மை இல்லாதது முக்கிய காரணங்களாக உள்ளன.
குறிப்பாக, இந்திரா சிக்னலில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிக்னல் கட்டமைப்பே தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப சாலை வசதிகளும், சிக்னல் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படவில்லை.
நுாறடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இந்திரா சிக்னல் வரையிலான 300 மீட்டர் துாரத்தில் நடைபாதையே இல்லை. சாலையோரம் வரிசையாக கார்கள், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சிக்னலின் நான்கு புறங்களிலும் உள்ள 'ப்ரீ லெப்ட்' பாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். கடலுார் மார்க்க சாலையில் சிக்னலுக்கு மிக அருகிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் ரவுண்டானாவை சுற்றி அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், சிக்னல் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதேபோல், கோரிமேடு மார்க்கத்தில் ஒரே நேரத்தில் மூன்று பஸ்கள் சாலையை அடைத்தபடி நிறுத்தப்படுவதால், பின்னால் வரும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.
எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றவும், காமாட்சி ஓட்டல் முதல் இந்திரா சிக்னல் வரையிலான சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்களை அப்புறப்படுத்தவும், கோரிமேடு மார்க்கத்தில் வணிக வரித்துறை அலுவலகம் எதிரே வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, மாற்று பஸ் நிறுத்தம் அமைக்கவும், 'ப்ரீ லெப்ட்' பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை முற்றிலும் தடை செய்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
