கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு: போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
UPDATED : அக் 29, 2026 11:09 PM
ADDED : அக் 29, 2026 11:05 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தடுக்க 20 முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரப்பகுதிக்குள் காலை 7:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையிலும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மதிக்காமல் பல வாகனங்கள் அனைத்து நேரங்களிலும் நகருக்குள் உலா வந்ததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. சமீபத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் அதிரடியாக களம் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவின்பேரில், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய வாய்ப்புள்ள 20 எல்லைப் பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட நேரங்களில் வரும் வாகனங்களை எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருப்பினும், தமிழக எல்லைப் பகுதிகள் வழியாகக் நகருக்குள் நுழையும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 100 அடி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் எச்சரிக்கை போஸ்டர்கள் வைக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சீனியர் எஸ்.பி., திவ்யா கூறுகையில், நகரப்பகுதியில் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. இதனை முற்றிலுமாக தடுக்கும் நோக்கிலேயே 20 இடங்களில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகருக்குள் கனரக வாகனங்களின் வருகை கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்’ என்றார்.
