UPDATED : நவ 21, 2026 11:30 PM
ADDED : நவ 21, 2026 11:30 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மாடு மீது ரயில் மோதிய விபத்தில் இன்ஜின் பழுதடைந்து பாதி வழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மெமூ பேசஞ்சர் ரயில், அருமார்த்தபுரம் ஜெ.ஜெ. நகர் அருகில் தண்டவாளத்தில் புகுந்த எருமை மாடு மீது ரயில் மோதியது. இதில் ரயில் இன்ஜின் பழுதாகி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்திலேயே நின்றது.
இதையடுத்து கண்டமங்கலத்தில் மாற்று ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயிலை இணைத்து புதுச்சேரி ரயில் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
ரயில் மோதி விபத்து: புதுச்சேரி சாலைகளில் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்த வந்த நிலையில், தற்போது ரயில்களும் இந்த மாடுகளால் பெரும் பிரச்னைக்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி நுாறடி ரோடு சந்திப்பில் இருந்து விழுப்புரம் வரை இந்த ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் கட்டுபாடில்லாமல் மாடுகள் மேய்ச்சலுக்கு விடுவதால், அடிக்கடி ரயிலில் மாடுகள் அடிபடுவது தொடர்கதையாகி வருகிறது. மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
