புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு புதுச்சேரியில் மீண்டும் சிக்கல்
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு புதுச்சேரியில் மீண்டும் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2026 04:22 AM

புதுச்சேரி: உள்துறை அமைச்சகத்தில் இருந்து நேற்று மாலை வரை அனுமதி வராததால், நாளை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் நீண்ட இழுப்பறிக்கு பின், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை 7ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த 3ம் தேதி முதல்வர் ரங்கசாமி புதிய அமைச்சர்களாக ராஜவேலு, காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் 2 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை கவர்னர் கைலாஷ்நாதனிடம் வழங்கினார். புதிய அமைச்சர்களுக்கான பெயர் பட்டியலை உடனடியாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய உள்துறை அமைச்சக அனுமதிக்காக அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வரை அமைச்சர் பதவி ஏற்புக்கான உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் வரவில்லை.
ஒரு வேளை இன்று இரவுக்குள் ஒப்புதல் வந்துவிட்டால் நாளை காலை 9:45 மணி அளவில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள லோக் நிவாசில் இரண்டு அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
மேலும், புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் 200 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மக்கள் மாளிகை கட்டடம் சீரமைப்பு பணிக்காக காலி செய்யப்பட்டு, கடற்கரை சாலையில் உள்ள லோக்நிவாஸ் கட்டடத்திற்கு முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக கடற்கரை சாலையில் உள்ள லோக் நிவாசில் பதவியேற்பு விழா நடக்கும் என, தெரிகிறது.
இடைத்தேர்தல் முடிந்ததும்
5வது அமைச்சர்
புதுச்சேரியில் 5 அமைச்சர்களுக்கான பதவிகள் உள்ளன. ஏற்கனவே நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். மீதமுள்ள 3 அமைச்சர் பதவியில், தற்போது 2 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொள்கிறார்கள். மீதமுள்ள 1 அமைச்சர் பதவியை தட்டாஞ்சாவடி இடைத் தேர்தல் முடிந்த பின், நிரப்பலாம் என்ற முடிவில் முதல்வர் ரங்கசாமி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
