பாசன வாய்க்காலில் செப்டிக் டேங்க் கழிவு கலந்த லாரி பறிமுதல்
பாசன வாய்க்காலில் செப்டிக் டேங்க் கழிவு கலந்த லாரி பறிமுதல்
ADDED : செப் 10, 2026 03:21 PM
பாகூர்: பாகூரில் பாசன வாய்க்காலில், செப்டிக் டேங்க் கழிவு நீரை ஊற்றிய, லாரியை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச் சாலையில், பாகூர் சந்திப்பு அருகே இருபுறமும் செல்லும் பாசன வாய்க்காலில், மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி வருவதாகவும், அந்த கழிவு நீர் விவசாய நிலத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பாகூர் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் நின்றிருந்த டெங்கர் லாரியில் செப்டிக் டேங்க் கழிவு நீர் வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த விவசாயிகள், லாரி டிரைவரிடம், கழிவுநீரை பாசன வாய்க்காலில் விட வேண்டாம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்த பாகூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அந்த கழிவு நீர் டேங்கர் லாரியை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து, பாகூரை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டேங்கர் லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த செந்தமிழன் 28; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
