UPDATED : அக் 09, 2026 08:09 PM
ADDED : அக் 09, 2026 08:07 PM

புதுச்சேரி: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், காசநோய் இல்லா கிராமம் பாராட்டு விழா மற்றும் ஜோஷ் குழு அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்.பி., அழகானந்தம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘காசநோய் ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகள், சமூக அமைப்புகள், இளைஞர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் அவசியம்’ என்றார்.
நிகழ்ச்சியில், ஜோஷ் குழு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த குழு காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்ப அறிகுறிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், தகுந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட ஊக்குவித்தல், காசநோயை கண்டறிதல், நோயறிதல், சிகிச்சை, ஆலோசனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சமூக அடிப்படையிலான நடவடிக்கைகளில் செயல்பட்டு வரும்.
நாடு முழுதும் 67,933 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 36 கிராமங்கள் காசநோய் இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது புதுச்சேரியின் காசநோய் ஒழிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
ஏற்பாடுகளை டாக்டர் கவிதா வாசுதேவன், சமூக மருத்துவத்துறை தலைவர் மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
