ADDED : செப் 24, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் காசநோய் குறித்து தேசிய மாநாடு நேற்று துவங்கியது. ஜிப்மரில் காசநோய்க்கான மேம்பட்ட மரபணு அடிப்படையிலான பரிசோதனைகள் குறித்த தேசிய மாநாடு அப்துல்கலாம் அரங்கில் நேற்று துவங்கியது.
அதனை தொடர்ந்து, தேசிய மாநாடு மற்றும் கொள்கை கலந்துரையாடல் நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். ஜிப்மர் இயக்குனர் வீர்சிங்நேகி, அரசு கொறடா ஆறுமுகம், பாலிசி ரெசிலியன்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் நந்திஷ் ஆர் பேத்தானி, சுகாதார துறை செயலர் குமார், சுகாதார இயக்குனர் செவ்வேள், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனில் ஜேக்கப்பர்த்தி, நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறையின் மாநாட்டு ஏற்பாட்டு தலைவி டாக்டர் சோனாலி சர்க்கார், நுரையீரல் மருத்துவ துறை மாநாட்டு ஏற்பாட்ச் செயலாளர் தர்மபிரகாஷ் திவேதி, ஜிப்மர் செவிலியர் கல்லுாரி பொறுப்பு முதல்வர் குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை (25ம் தேதி) வரை நடக்கும் மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மரபணு அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பங்குதாரர்கள் கலந்து கொண்டு, காசநோயில் மருந்து எதிர்ப்பை கண்டறிதலை வலுப்படுத்துதல் மற்றும் காசநோய் கண்டறிதல், சிகிச்சையில் மேம்பட்ட மரபணு தொழில்நுட்பங்களை முன்னெடுத்தல் குறித்து கலந்துரையாடுகின்றனர்.
