இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாத அவலம்: இ.சி.ஆரில் பொதுமக்கள் திடீர் மறியல்
இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாத அவலம்: இ.சி.ஆரில் பொதுமக்கள் திடீர் மறியல்
UPDATED : செப் 21, 2026 10:53 PM
ADDED : செப் 21, 2026 10:45 PM

புதுச்சேரி: இறந்தவரது உடலை தகனம் செய்ய முடியாததை கண்டித்து இ.சி.ஆரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அடுத்த பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அப்பகுதி மக்களுக்கு கடலோரம் சுடுகாடு உள்ளது. கடுமையான கடல் அரிப்பினால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இக்சுடுகாடு கட்டடம் காணாமல்போய்விட்டது. அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இறந்தவர்களது உடல்களை தீமூட்டி எரித்து வருகின்றனர்.
நேற்று அப்பகுதியில் வசிக்கும் அண்ணாமலை மகன் முத்து உடல்நல குறைவினால் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது. அவரது உடலை திறந்த வெளியில் எரித்த போது திடீரென மழை கொட்டியது. உடலை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் நிலைகுலைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டில் இருந்து அப்படியே பேரணியாக பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் நேற்று மாலை 6.15 மணியளவில் கொட்டும் மழையிலும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தகவல் அறிந்த வந்த பெரியக்காலாப்பட்டு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சுடுகாடு கட்டடம் கட்டிதரப்படும் என உறுதியளித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 7.15 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதி பஞ்சாயத்தார் கூறும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு சுடுகாட்டு கட்டடம் கடல் அரிப்பினால் அரித்து சென்றுவிட்டது. சட்டசபை தேர்தலுக்கு முன் கூட கட்டடம் கட்ட பூஜை போடப்பட்டது. இருந்தும் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இறந்தவர்களது உடல்களை தகனம் செய்ய முடியாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த விஷயத்தில் கவர்னர், முதல்வர், தொகுதி எம்.எல்.ஏ., போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
