ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலாகிறது: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலாகிறது: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
ADDED : அக் 20, 2026 08:14 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதற்கான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களின் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட புதிய திட்டமாகும்.
இது, என்.பி.எஸ். எனும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பம்சங்களையும், ஓ.பி.எஸ்., எனும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் உறுதியான பலன்களையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரைவில் கணக்கு மற்றும் கருவூலத் துறை கவர்னரின் அனுமதியுடன் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்களின் விருப்ப தேர்வினை பெற திட்டமிட்டுள்ளது.
சிறப்பு என்ன...
தேசிய ஓய்வூதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முதன்மையான நன்மை, அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பின் உறுதியான வருமானத்தை அளிப்பதாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் தொகையானது குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர் காலமானால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதத் தொகை அவரது குடும்பத்தினருக்கு மனைவி அல்லது கணவருக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கும் தொடர்ந்து வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கும் அரசின் விதிமுறைகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியத்தைத் தவிர, ஓய்வு பெறும்போது ஒவ்வொரு 6 மாத முடிக்கப்பட்ட சேவைக்கும், அப்போதைய அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு கூடுதல் தொகையாக ஒருமுறை வழங்கப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.
தற்போதைய ஓய்வூதிய திட்டங்கள்:: புதுச்சேரியில் கடந்த காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இது முழுமையான உறுதியளிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். இதில் ஊழியர்களின் பங்களிப்பு எதுவும் இல்லாமல், கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் தொகையும் அகவிலைப்படி உயர்வும் எத்தகைய சந்தை அபாயமுமின்றி அரசு முழுமையாக வழங்கி வந்தது.
ஆனால், இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தியதால் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொண்டுவரப்பட்ட என்.பி.எஸ்., எனும் தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இதில் ஊழியர் தன் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதமும், அரசு தனது பங்களிப்பையும் செலுத்துகின்றன.
இந்தத் தொகை பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு, அதன் லாப-நஷ்டங்களின் அடிப்படையில் ஓய்வுபெறும் போது நிதி திரட்டப்படுகிறது. இதில் உறுதியான மாதாந்திர ஓய்வூதியத் தொகை கிடையாது.
தற்போது மூன்றாவது ஓய்வூதிய திட்டமாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் புதுச்சேரியில் அமலாகிறது. இருப்பினும் அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமா அல்லது தேசிய ஓய்வூதிய திட்டமா என்பதில் ஏதேனும் ஒன்றிணை மட்டும் தேர்வு செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
