ADDED : நவ 01, 2025 02:08 AM

வில்லியனுார்: புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஊசுடு ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவை எட்டியது.
புதுச்சேரியின் பறவைகள் சரணாலயமாக உள்ளது ஊசுடு ஏரி. ஏரியின் முழு கொள்ளவு 3.5 மீட்டர் உயரமாகும். இந்நிலையில், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கிய கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், வீடூர் அணை திறக்கப்பட்டு சங்கராபரணி ஆற்று வழியாக வந்த நீர் சுத்துக்கேணி படுகை அணையில் நிரம்பி, அங்கிருந்து வாய்க்கால் வழியாக ஊசுடேரிக்கு வந்தது. இதனால், நேற்று மாலை ஏரியின் முழு கொள்ளளவான 3.5 மீட்டர் அளவை எட்டியது. இதனால் ஊசுடேரி கடல் போன்று காட்சியளிக்கிறது.
ஏரி நிரம்பியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட தலைமை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலைப் பொறியளர்கள் சிரஞ்சீவி, சஞ்சிவீ ஆகியோர் பொறையூர், பத்துக்கண்ணு, தொண்டமாநத்தம், கடப்பேரிகுப்பம், பூத்துறை கிராமங்களில் ஏரியின் கரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஊசுடு ஏரி கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி நிரம்பிய நிலையில், இந்தாண்டு 7 நாட்கள் முன்பாக நேற்று மாலையே நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
ஏரிக்கு நீர் வரத்தை பொறுத்து ஓரிரு நாட்களில் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள ஊசுடேரிக்கு செல்லும் ஷட்டர்கள் மூடப்பட்டு, போக்கு வாய்க்கால் ஷட்டர் திறந்து, சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் திருப்பிட வாய்ப்பு உள்ளது.

