வாரிசு சான்றிதழுக்கு ரூ. 3,000 லஞ்சம்: வில்லியனுாரில் வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றிதழுக்கு ரூ. 3,000 லஞ்சம்: வில்லியனுாரில் வி.ஏ.ஓ., கைது
UPDATED : ஜூன் 11, 2026 09:41 PM
ADDED : ஜூன் 11, 2026 09:01 PM

வில்லியனுார்: வில்லியனுார் தாலுகா அலுவலகத்தில், வாரிசு சான்றிதழுக்கு, விதவை பெண்ணிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, குருமாம்பேட் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த பிப்., மாதம் வில்லியனுார் தாலுகா அலுவலத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில், சின தினங்களுக்கு முன்பு, வில்லியனுார் தாலுகா அலுவலகத்தில் குருமாம்பேட் பகுதி வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வரும் முருகையன், 57; என்பவரை அணுகினார். அவர், விண்ணப்பத்தை பரிசீலைனை செய்து சான்றிதழ் கொடுப்பதாக கூறி, அனுப்பி வைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், அப்பெண், வி.ஏ.ஓ.,வை மீண்டும் சந்தித்தபோது, 3,000 ரூபாய் செலவாகும் கொடுத்தால். வாரிசு சான்றிதழ் தருவதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அப்பெண், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
பின், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆலோசனைப்படி, நேற்று பகல் 12:00 மணியளவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள வி.ஏ.ஓ அறைக்கு சென்ற அப்பெண் கொடுத்த 3,000 ரூபாயை வி.ஏ.ஓ., முருகையன் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், முருகையனை பிடித்தனர். பின், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முருகையன் துறை ரீதியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
