கருவில் சிசுக்குள் இறப்பு: ஆய்வு நடத்த வி.சி.க., வலியுறுத்தல்
கருவில் சிசுக்குள் இறப்பு: ஆய்வு நடத்த வி.சி.க., வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 18, 2026 05:33 PM
ADDED : ஜூன் 18, 2026 05:32 PM
புதுச்சேரி: கருவில் சிசுக்கள் இறப்பது குறித்து சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க., கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எழில்மாறன் கவர்னர், தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர் மற்றும் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள மனு:
வில்லியனுார் தொகுதி அம்பேத்கர் பேர், உத்திரவாகினிப் பேட், புதுப்பேட், பெரியபேட், சுப்ரமணிய சிவா நகர், பீமாராவ் நகர், திருவள்ளுவர் நகர், இந்து குறவழர் குடியிருப்பு, காசி விஸ்வநாதர் நகர், கே.வி.நகர் நரிக்குறவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கட்டட வேலை உள்ளிட்ட கூலி வேலை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளின் கருவில் வளரும் சிசுக்களுக்கு இதயத்துடிப்பு இல்லாத நிலை மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை டாக்டர்களால் அகளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இல்லாத நிலையில், டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் கருவில் உள்ள சிசுக்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால், பல குடும்பங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளன.
கருவில் உள்ள சிசுக்களுக்கு இதயத்துடிப்பு இல்லாதது ஏன், என்பது குறித்து சுகாதாரத்துறை உரிய ஆய்வுகள் நடத்தி உரிய தீர்வு காண வேணடும் என, தெரிவித்துள்ளார்.
