/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினம், உப்பளம் அணிகள் வெற்றி
/
வீராம்பட்டினம், உப்பளம் அணிகள் வெற்றி
ADDED : நவ 03, 2024 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 போட்டிகள் கடந்த ஆக.24ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இதில், 8 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2ம் பரிசாக 40 ஆயிரம், 3ம் பரிசாக 30 ஆயிரம், 4வது பரிசாக 20,000 மற்றும் பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
லீக் போட்டி முடிவில் கோரிமேடு பேந்தர்ஸ், வீராம்பட்டினம் ஷார்க்ஸ், குமாரபாளையம் வாரியர்ஸ், உப்பளம் ராயல்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன.
முதல் இரண்டு இடங்களை பிடித்த கோரிமேடு பேந்தர்ஸ், வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணிகள் குவாலி பயர் 1 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு, 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கி 40 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன், விவேக்ராஜ் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன் எடுத்தனர்.
கோரிமேடு பேந்தர்ஸ் அணியின் ரமேஷ், கிட்லா சத்ய நாராயணா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து ஆடிய கோரிமேடு பேந்தர்ஸ் அணி 11 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்கள் எடுத்தது. வீராம்பட்டினம் அணியின் தமிழரசன் 3 விக்கெட்கள், பூபதி, ரிஸ்வான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் தமிழரசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
எலிமினேட்டருக்கான போட்டியில் குமாரபாளையம் வாரியர்ஸ், உப்பளம் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உப்பளம் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
குமாரபாளையம் வாரியர்ஸ் அணியின் லக் ஷ்மிநாதன் 3 விக்கெட்கள், சோமசுந்தரம் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து ஆடிய குமாரபாளையம் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.
உப்பளம் ராயல்ஸ் அணியின் அந்தோணி 3 விக்கெட், செந்தில் 2 விக்கெட் வீழ்த்தினர். உப்பளம் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபயர் 2க்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருது, அந்த அணியின் அந்தோணிக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை போட்டி கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் ஆகியோர் செய்துள்ளனர்.