/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒயிட் டவுன் சாலைகளில் 31ல் வாகனங்கள் செல்ல தடை
/
ஒயிட் டவுன் சாலைகளில் 31ல் வாகனங்கள் செல்ல தடை
ADDED : டிச 20, 2024 03:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 31ம் தேதி ஒயிட் டவுன் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் கடற்கரை சாலை செல்லும் ஒயிட் டவுன் பகுதி சாலைகள் முழுதும், வாகனங்கள் தடை செய்யப்படும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு, 6 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள் தடையின்றி செல்வதற்கு போலீஸ்துறை சார்பில், அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டைக்கு உரியவர்களது வாகனங்கள் மட்டுமே, அந்த பகுதியில் அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி, கடற்கரை சாலையில் மட்டும், 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அங்கு உயர் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள், கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கவும் கண்காணிக்கவும், கடலோர காவல் படை போலீசார் நிறுத்தப்படுவர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து கடற்கரைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்த கூட்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், 3 பசுமைப்பகுதிகள் அமைத்து, அங்கு மீட்பு பிரிவு, தீயணைப்பு பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன.
தனியார் விடுதிகள் அரசிடம் அனுமதி பெற்ற நேரங்களில் மட்டுமே, புத்தாண்டின் போது செயல்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.