/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற்ற வ.உ.சி., பள்ளி
/
பழமை மாறாமல் புதுப்பொலிவு பெற்ற வ.உ.சி., பள்ளி
ADDED : ஜன 19, 2025 05:57 AM

இன்றைய சூழ்நிலையில் கல்வி, மருத்துவத்தில் புதுச்சேரி மாநிலம் சிறந்தோங்கி நிற்கிறது என்றால், அதற்கு பிரெஞ்சியர்கள் ஒரு காரணம்.
புதுச்சேரியை கல்வி சோலையாக மாற்றியதில் பிரெஞ்சியர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. புதுச்சேரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, பிரெஞ்சியர்கள் கல்வி, மத வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டினர். அங்காங்கே கல்வி நிலையங்களையும் ஏற்படுத்தி, பிரெஞ்சு மொழியில் கல்வியை போதித்தனர்.
1885ல் கலவை கல்லுாரி உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், துவக்க பள்ளியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதையடுத்து மிஷன் வீதியில் 1886-87ம் ஆண்டு எக்கோல் பிரைமரி என்ற பெயரில் ஒரு அரசு பள்ளி துவங்கப்பட்டது. அது தான் இன்றைய வ.உ.சி., பள்ளி.
ஆரம்ப காலத்தில் பிரெஞ்சு மொழியில் கல்வி போதிக்கப்பட்டது. இந்த பிரெஞ்சு கல்வி முறை 1960ம் ஆண்டு வரை நீடித்தது. அதன் பிறகு தமிழ் மொழியில் கல்வி போதிக்கப்பட்டது. இப்பள்ளியில் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் தமிழாசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். சுப்பையா, எம்.ஓ.எச்.,பாரூக் உள்பட பல்வேறு தலைவர்களை இப்பள்ளி உருவாக்கி கொடுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். நுாற்றாண்டு கண்ட இந்த பள்ளி கட்டடம் சேதமடைந்து பலவீனமாக காட்சியளித்தது. இதனையடுத்து புதுச்சேரி அரசு கடந்த 2021 ம் ஆண்டு பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் 2.99 கோடி ரூபாய் செலவில் பாரம்பரிய கட்டங்களை பாதுகாக்கும் இன்டாக் அமைப்பு உதவியுடன் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பழமை மாறாமல் இரண்டு ஆய்வகம் உள்ளிட்ட 8 வகுப்பறைகள் புதுப்பிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. கட்டடத்தின் மீது வளர்ந்திருந்த மரங்கள், செடிகள் அகற்றப்பட்டன. சுவரில் பலவீனமாக இருந்த பூச்சுகள் சுரண்டப்பட்டன.
கட்டடத்தின் மேல்தளத்தினை தாங்கும் வகையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் பொருத்தி, பலமாக்கப்பட்டு மீண்டும் மறு உயிர் பெற்றது.
மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டியப்படி, புதுச்சேரியின் அடையாளமாக இன்றும் பெருமையுடன் வீற்றிருக்கிறது.