ADDED : மார் 20, 2026 07:36 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் 'வாக்காளர் விழிப்புணர்வில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரியில், நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய டிஜிட்டல் போஸ்டர் தயாரித்தல், பேச்சுப் போட்டி மற்றும் ஓவியம் வரைதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பரிசுகள் வழங்கினார்.
அவர், பேசுகையில்,'நாம் அனைவரும் தவறாமல் ஓட்டளித்திட வேண்டும். கண்ணியமாக வாக்களிப்போம் என உறுதி கொள்வோம். 85 வயது கடந்த முதியவர்களுக்கு வீட்டிலேயே ஓட்டளிக்கும் வசதிகள், தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் பற்றி தெரிந்தால் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி, வேட்பாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள இ.கே.ஒய்.சி., மொபைல் செயலி போன்றவற்றை பலர் தெரிந்து கொள்ளுதல் அவசியம்' என்றார்.
நிகழ்ச்சியில் மகளிர் பொறியியல் கல்லுாரியின் முதல்வர் தணிகாசலம், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
