/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் ஓட்டுப் பதிவு... 78.57 சதவீதம்; கடந்த தேர்தலைவிட குறைந்ததால் கட்சிகள் கலக்கம்
/
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் ஓட்டுப் பதிவு... 78.57 சதவீதம்; கடந்த தேர்தலைவிட குறைந்ததால் கட்சிகள் கலக்கம்
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் ஓட்டுப் பதிவு... 78.57 சதவீதம்; கடந்த தேர்தலைவிட குறைந்ததால் கட்சிகள் கலக்கம்
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் ஓட்டுப் பதிவு... 78.57 சதவீதம்; கடந்த தேர்தலைவிட குறைந்ததால் கட்சிகள் கலக்கம்
ADDED : ஏப் 20, 2024 04:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 78.5 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.கடந்த லோக்சபா தேர்தலை காட்டியிலும் 2.62 சதவீதம் சரிந்துள்ளதுஅரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுதும் 967 ஓட்டுச்சாவடிகளில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது.
மாதிரி ஓட்டு பதிவு
முன்னதாக, காலை 6:30 மணியளவில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தப்பட்டது. இதில் 50 ஓட்டுகள் செலுத்தப்பட்டு, பின்னர் அவை அழிக்கப்பட்டு, மீண்டும் ஓட்டு பதிவுகள் தயாராக சீலிட்டு வைக்கப்பட்டன. ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டு தனியாக பாதுகாக்கப்பட்டன. அதன் பின், காலை 7:00 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.
குறிப்பாக கிராமப்புறங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. முதலியார்பேட்டை தொகுதி பிளஸ்டு மதர்தெரசா, நைனார்மண்டபம் ஆரம்ப பள்ளி உள்பட சில ஓட்டுச்சாவடிகளில் வி.வி.பாட் இயந்திரம் மக்கர் செய்தது. இதனையடுத்து வி.வி., பாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டு, ஒட்டுப் பதிவு தாமதமாக துவங்கியது. இந்த ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முடியாதவர்கள், வயதான முதியவர்கள் 345 பேர் வீட்டில் இருந்து தங்களை அழைத்து வந்து ஓட்டுபோட செய்ய வேண்டும் என விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை தேர்தல் துறையினர் தன்னார்வலர்கள் வாகனங்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அழைத்து வந்து ஓட்டளிக்க செய்தனர்.
இதேபோல் முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு ஓட்டுப்பதிவில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்கள் வரிசையில் காத்திருக்காமல் ஓட்டுப்போட்டனர். மாற்றுதிறனாளிகள் ஓட்டளிப்பதற்கு வசதியாக ஓட்டுச்சாவடிகளில் சாய்வுதளம் சக்கர நாற்காலியும் நிறுத்தப்பட்டு இருந்தன. ஓட்டளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை ஓட்டுச்சாவடியில் இருந்த தன்னார்வலர்கள் சக்கர நாற்காலியில் அமர வைத்து உள்ளே சென்று ஓட்டளிக்க வைத்தனர்.
டோக்கன்
மாலை 6:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. அவர்கள் தொடர்ந்து ஓட்டினை பதிவு செய்தனர்.
ஓட்டு சதவீதம்
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 10,23,699 பேர். நேற்றிரவு 8:00 மணி நிலவரப்படி ஆண்கள்-3,76,431 பேர், பெண்கள்-4,27742, மூன்றாம் பாலித்தனவர் 104 பேர் ஓட்டளித்தனர். 78.57 சதவீதம் பேர் ஓட்டளித்தனர். அதிகபட்சமாக பாகூர் தொகுதியில் 88.76 சதவீதம் பதிவாகி இருந்தது. குறைந்தபட்சமாக மாகி தொகுதியில் 65.11 சதவீதம் பதிவாகியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் 81.19 சதவீதம் பதிவாகி இருந்தது. இந்த லோக்சபா தேர்தலில் 2.62 சதவீதம் ஓட்டு சரிந்துள்ளது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுகள் யாருக்கு விழுந்திருக்கும் என கலக்கமடைந்துள்ளனர்.
ஓட்டு பதிவு முடிந்ததும் 967 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 1934 பேலட் யூனிட்,967 கன்ட்ரோல் யூனிட்,967 வி.வி.,பாட் இயந்திரங்கள் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

