/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 5 கோடி மோசடி வசூல் செய்த பணம் எம்.எல்.ஏ.,களுக்கு கொடுக்கப்பட்டதா?
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 5 கோடி மோசடி வசூல் செய்த பணம் எம்.எல்.ஏ.,களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 5 கோடி மோசடி வசூல் செய்த பணம் எம்.எல்.ஏ.,களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 5 கோடி மோசடி வசூல் செய்த பணம் எம்.எல்.ஏ.,களுக்கு கொடுக்கப்பட்டதா?
ADDED : டிச 29, 2024 05:23 AM
புதுச்சேரியில் சாதாரண கூலி தொழிலாளி தனது சம்பளத்தில் சிறிதளவு மிச்சம் செய்து அதனை மாதந்தோறும் ஏலச்சீட்டு கட்டி குடும்ப அவசர தேவை அல்லது மொத்தமாக பணம் தேவைப்படும் போது ஏலச்சீட்டு பணத்தை எடுத்து செலவு செய்வது வழக்கம். கூலித் தொழிலாளி அதிகபட்சமாக ரூ. 50 முதல் ரூ. 1 லட்சம் வரை சீட்டு கட்டுவர்.
ஆனால் கணக்கில் வராமல் அளவுக்கு அதிகமான பணம் வைத்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் ரூ. 1 முதல் ரூ. 5 கோடி வரை சீட்டு கட்டி வருகின்றனர். சில எம்.எல்.ஏ.,க்களின் நேரடி பார்வையில் ஏலச்சீட்டு தொழில் புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வருகிறது.
வியாபாரத்திற்கு மொத்தமாக பணம் தேவைப்படும் வியாபாரிகள் இதுபோன்ற ஏலச்சீட்டுகளில் பணம் எடுத்து வியாபாரம் செய்கின்றனர். இந்த ஏலச்சீட்டு முறையில் முதலியார்பேட்டையில் நுாதன மோசடி அரங்கேறி உள்ளது.
நெல்லித்தோப்பு ரயில்வே பாலம் அருகில் ஜே.பி., சிட்ஸ் பண்ட்ஸ் என்ற பெயரில் பிலோமினா என்ற பெண்மணி ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் ரூ. 50 லட்சம், 1 கோடி என, பலர் ஏலச்சீட்டு கட்டி வந்தனர். ஒரு ஏலச்சீட்டில் மொத்தம் 5 முதல் 7 பேர் மட்டுமே உண்மையான சீட்டு பணம் கட்டுபவர்கள். மீதள்ள நபர்கள் பிலோமீனா ஏற்பாடு செய்த போலியான ஆட்கள்.
மாதந்தோறும் ஏலச்சீட்டு விடுவதுபோல் ஏலம் விடுவர். அதனை பிலோமீனா ஆட்களே ஏலம் எடுப்பதுபோல் ஏலம் விடப்படும். ஆனால் மொத்த பணத்தையும் பிலோமீனா எடுத்து, வட்டிக்கு பலரிடம் கொடுத்து வந்துள்ளார்.
10 மாதம் வரை லட்சக்கணக்கில் பணம் கட்டிய பின், திடீரென ஏலச்சீட்டு பணம் எடுத்தவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக கூறி, ஏலச்சீட்டை கலைத்து விடுகிறோம் என, கூறி, இதுவரை கட்டிய பணத்தை மட்டும் பிரித்து கொடுப்பர்.
இப்படி நுாதன முறையில் ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக, சுந்தரமூர்த்தி என்பவர் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிலோமீனா மற்றும் அவரது கணவர் பியர்ஜான் மீது மோசடி வழக்கு பதிவு செய்து பிலோமீனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், பிலோமீனா இதுபோல் 11க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி ரூ. 5 கோடி வரை வசூல் செய்து, திருப்பி தராமல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாநிலத்தில் அதிகார மையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ., ஒருவர் பிலோமீனாவுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வந்ததும், ஏலச்சீட்டு பணம் கொடுக்கல் வாங்கலின்போது அவர், முன்னின்று பணம் பெற்று கொடுத்தது தெரியவந்தது.
இதனால் பிலோமீனா மற்றும் அவரது குடும்பத்தினர், எஸ்.ஐ., மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரது வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் எஸ்.ஐ., வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
பிலோமீனா கைது செய்யப்பட்டபோது அவரிடம் பணம் ஏதும் சிக்கவில்லை. இதனால் ஏலச்சீட்டு பணம் யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என, விசாரித்தபோது சில எம்.எல்.ஏ.,களும் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏலச்சீட்டு பணத்தை எப்படி வசூல் செய்வது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

