/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் துார் வாரும் பணியின்போது குடிநீர் குழாய் உடைப்பு: ஆணையர் ஆய்வு
/
வாய்க்கால் துார் வாரும் பணியின்போது குடிநீர் குழாய் உடைப்பு: ஆணையர் ஆய்வு
வாய்க்கால் துார் வாரும் பணியின்போது குடிநீர் குழாய் உடைப்பு: ஆணையர் ஆய்வு
வாய்க்கால் துார் வாரும் பணியின்போது குடிநீர் குழாய் உடைப்பு: ஆணையர் ஆய்வு
ADDED : டிச 07, 2025 06:34 AM

திருக்கனுார்: திருக்கனுார் வணிகர் வீதியில் கழிவுநீர் வாய்க்கால் துார்வாரும் பணியின் போது, உடைந்த குடிநீர் குழாயை ஆணையர் எழில்ராஜன் பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
திருக்கனுார் பஜார் வீதி மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வணிகர் வீதி வழியாக 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் மூலம் திருக்கனுார் சிவன் கோவில் எதிரே உள்ள குளத்தில் சென்று சேர்கிறது. இதற்கிடையே, வணிகர் வீதியில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்கால் பொதுப் பணித்துறையின் மூலம் துார்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதில், வாய்க்கால் பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் போது, எதிர்பாராத விதமாக வாய்க்கால் குறுக்கே, வணிகர் வீதி, பள்ளி வாசல் வீதி, தேவநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். ஆனால், உடைந்த குடிநீர் குழாயை இணைத்த பகுதி வாய்க்காலின் நடுவே இருப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டினர்.
இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் நேற்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு பகுதி கழிவுநீர் வாய்க்காலில் இல்லாத வகையில், சீரமைக்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

