/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொர்ணாவூர் தடுப்பணை உடைந்ததால் வீணாகும் தண்ணீர் பாகூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்
/
சொர்ணாவூர் தடுப்பணை உடைந்ததால் வீணாகும் தண்ணீர் பாகூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்
சொர்ணாவூர் தடுப்பணை உடைந்ததால் வீணாகும் தண்ணீர் பாகூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்
சொர்ணாவூர் தடுப்பணை உடைந்ததால் வீணாகும் தண்ணீர் பாகூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்புவதில் சிக்கல்
ADDED : அக் 25, 2025 11:09 PM

சொர்ணாவூர் தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, சாத்தனுார் அணையில் இருந்து வரும் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதால், பாகூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூரில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே, புதுச்சேரி - தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சாத்தனுார் அணையில் திறக்கப்படும் உபரி நீர், சொர்ணாவூர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக புதுச்சேரி மாநிலம், பாகூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படும். சொர்ணாவூர் அணைக்கட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 28 ஏரிகளுக்கும், தமிழக பகுதியில் 8 ஏரிகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இதன் மூலமாக, புதுச்சேரி மாநிலத்தில் 4,776 ஆயிரம் ஏக்கர், தமிழக பகுதியில் 1,275 ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகின்றன. இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், புதுச்சேரி - தமிழகம் என, இரு பகுதியிலும் நிலத்தடிநீர் மட்டம் உயர்வுக்கு காரணமாக உள்ளது.
இந்த தடுப்பணையில், கடந்த 2021ல் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது உடைப்பு ஏற்பட்டது. இதனை, சீரமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என, புதுச்சேரி, தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில், 32 கோடி செலவில், கடந்த ஆண்டு தடுப்பணை சீரமைக்கப்பட்டு பலப்படுத்தும் பணி துவங்கியது. தடுப்பணையின் நடுப்பகுதியில் பணிகள் அரைகுறையாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, கட்டுமானம் சுமார் 100 மீட் டர் நீளத்திற்கு மீண்டும் உடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டது. அதன் பின், சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல், அப்படியே விடுப்பட்டுள்ளது.
தற்போது, சாத்தனுார் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், சொர்ணாவூர் அணைக்கட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில், அங்கிருந்து வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது.
இதனால், அங்கிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சொர்ணாவூர் அணைக்கட்டினை நம்பி இருக்கும் புதுச்சேரியில் 28 ஏரிகளும், தமிழக பகுதியில் 8 ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் இந்த ஆண்டு நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள், சொர்ணாவூர் தென்பெண்ணையாற்றில் உட்புற வடக்கு கரை யோரமாக தற்காலிகமாக வாய்க்கால் அமைத்து, அதன் மூலமாக பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே, பாகூர் ஏரியில் நீர் மட்டம் 2 மீட்டரை எட்டி உள்ள நிலையில், ஆற்றில் நீர் வரத்தை பொறுத்து பாகூர் உள்ளிட்ட ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

