புதுச்சேரியில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்ன சென்னை மண்டல தலைவர் சோபனாகுமார் பளீச்
புதுச்சேரியில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்ன சென்னை மண்டல தலைவர் சோபனாகுமார் பளீச்
ADDED : செப் 02, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம் என, ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய சென்னை மண்டல தலைவர் சோபனா குமார் பேசினார்.
புதுச்சேரி அதிதியில் நேற்று நடந்த ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கில் அவர், பேசியதாவது:
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அப்பிடா எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல நாடுகளுக்கு வேளாண் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நம் நாட்டில் இருந்து 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மட்டும் 20,000 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புதுச்சேரியில், கடந்த மாதமே மாகே மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, ஏற்றுமதிக்கு சாத்தியமுள்ள முந்திரி மற்றும் அரிசி உற்பத்தியாளர்களை சந்தித்தோம். புதுச்சேரியில் அரிசி, சிறுதானியங்கள், கரும்பு, காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதன் அளவை மேலும் உயர்த்த முடியும்.
புதிய காய்கறி, பழங்கள் உற்பத்தி குறைவாக இருந்தாலும், புதுச்சேரியில் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். ஏனெனில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து புதிய வேளாண் விளைபொருட்களை பெற்று, புதுச்சேரியில் உள்ள பதப்படுத்தும் மண்டலங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக மாற்றி, ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்த இலக்கை நோக்கித் தான் நாம் நகர வேண்டும். புதுச்சேரியிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியை அதிகரிக்க நடுத்தர சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலகங்கள் அமைச்சகத்தின் உதவி தேவைப்படுகிறது’ என்றார்.
