மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட இதயம் வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தம்
மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட இதயம் வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தம்
ADDED : செப் 02, 2026 09:22 PM

புதுச்சேரி: சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி, மருத்துவமனைக்கு மதுரையில் இருந்து 178 கி.மீ., கொண்டு வரப்பட்ட இதயம், பயனாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 வயது பயனாளிக்கு இதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, தானம் பெற்ற இதயம் மதுரையிலிருந்து 178 கி.மீ. மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து சீரமைக்கப்பட்டு 1 மணி 54 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இதயம், இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம் பயனாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்த தானதாரரின் குடும்பத்தினருக்கும், போக்குவரத்தை சீரமைத்து கொடுத்த திருச்சி மண்டல போலீசாருக்கும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, இதயத்தைப் பெற்ற பயனாளியின் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதய மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் அனுமதி மற்றும் உள்கட்டமைப்பு கொண்ட மருத்துவ மையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சென்னை மற்றும் கோயம்புத்துார் போன்ற மருத்துவ நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திறன் உருவாகியிருப்பது, பெரம்பலுார் மட்டுமின்றி அரியலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த சாதனையை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிறுவனர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் நீவாணி கதிரவன் மற்றும் நகுலன் ஆகியோர் தலைமை இதய மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையிலான இதய மாற்று மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
