/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொகுதியில் செல்வாக்கு யாருக்கு? பா.ஜ., மேலிடம் ரகசிய சர்வே
/
தொகுதியில் செல்வாக்கு யாருக்கு? பா.ஜ., மேலிடம் ரகசிய சர்வே
தொகுதியில் செல்வாக்கு யாருக்கு? பா.ஜ., மேலிடம் ரகசிய சர்வே
தொகுதியில் செல்வாக்கு யாருக்கு? பா.ஜ., மேலிடம் ரகசிய சர்வே
ADDED : அக் 22, 2025 05:40 AM
புதுச்சேரி: தொகுதியில் யாருக்கு செல்வாக்கு என பா.ஜ., மேலிடம் ரகசிய சர்வே நடத்தி, தகவல்களை திரட்டியுள்ளதால் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில்என்.ஆர்.காங்.,10, பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். கூட்டணி ஆட்சி 4.5 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் இருகட்சிகளும் அடுத்தடுத்து மாநில நிர்வாகிகள் நியமித்து சட்டசபை தேர்தலுக்கு தயராகி வருகின்றன.
பா.ஜ., வை பொருத்தவரை கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பெரிய பாடத்தை கொடுத்துள்ளது.
ஆளும் கட்சியாக இருந்தும் கூட, வெற்றி வாய்ப்பினை இழந்தது சற்றே யோசிக்க வைத்துள்ளது. எனவே வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க கவனமாக காய் நகர்த்தி வருகின்றது. 1.5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த கையோடு, மாநில நிர்வாகிகளை முற்றிலுமாக மாற்றி அமைத்தது.
ஒவ்வொரு தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் யார் என அண்மையில் ரகசிய சர்வேயை பா.ஜ., மேலிடம் எடுத்துள்ளது.
இந்த சர்வே நேரடியாக டில்லியில் இருந்து வந்த குழு எடுத்து சென்றுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் சுற்றி சுற்றி வந்து இந்த சர்வே எடுத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் யார், அவருக்கு தற்போது உண்மையிலேயே இப்போது மக்கள் மனங்களில் செல்வாக்கு உள்ளதா, அவருக்கு அடுத்து யாரை நிறுத்தினால் அத்தொகுதியில் வெற்றி பெற முடியும் என அனைத்து தகவல்களையும் பா.ஜ., மேலிடம் சர்வேயில்திரட்டி எடுத்து சென்றுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., 16 தொகுதிகளிலும், பா.ஜ., 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க., 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த முறை 30 தொகுதிகளில் வேட்பாளர்களை தனித்து நிற்கும் அளவிற்கு பா.ஜ., வளர்ந்துள்ளது. பா.ஜ., வில் இணைந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் எம்.எல்.ஏ., கனவில் மூழ்கியுள்ளனர்.
சில தொகுதிகளில் மூன்று பேர் கூட சீட்டினை எதிர்பார்த்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அப்படியே டில்லிக்கு சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை போட்டுவிட்டு, தேர்தலில் நிற்க சிபாரிசு செய்யமாறு ஒரு துண்டையும் போட்டு வந்துள்ளனர். ஆனால் தேர்தலில் யாருக்கு சீட் என்பதை இந்த சர்வே அடிப்படையில் கொடுக்கவே பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதால் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.பலர், லிஸ்டில் தனது பெயர் உள்ளதா, இல்லையா என டில்லி மேலிடத்தில் தெரிந்தவர்களை நச்சரித்துவருகின்றனர்.
சர்வே அடிப்படையில் சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளதால் பா.ஜ., புயல் வீசப்போவது உறுதி..