/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் கும்பல் மீட்டெடுத்து மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
/
சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் கும்பல் மீட்டெடுத்து மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் கும்பல் மீட்டெடுத்து மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் கும்பல் மீட்டெடுத்து மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
ADDED : ஜன 18, 2024 03:56 AM
புதுச்சேரி: ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகளை சிக்னல்களில் பிச்சையெடுக்க வைக்கும் கும்பல் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டுனர்களிடம் குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பதும், வாட்டசாட்டமான உடல்வாகுடன் உள்ளவர்களே பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதும் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.
குறிப்பாக ராஜிவ் சிக்னல், இந்திரா சிக்னல் உள்ளிட்ட முக்கிய சிக்னல்களில் கண்களில் ஏக்கத்துடன், பார்க்கவே பரிதாபமான நிலையிலுள்ள குழந்தைகளை தோளில் கட்டிய துண்டில் வைத்துக் கொண்டு பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். அவர்கள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக ஒடி வந்து வாகன ஓட்டுனர்களிடம் பிச்சை எடுக்கின்றனர்.
சிக்னல் விழுந்த பிறகும் அவர்கள் விலகாமல் நின்று பிச்சை கேட்பதால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
சிக்னல்களில் பிச்சையெடுக்கும் அனைவரும் ஓடிசா, பீகார், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அந்த கும்பலின் கையில் உள்ள குழந்தை படும் பாடு மிகவும் கொடுமையாக உள்ளது.
பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வெயில், மழை, குளிர் என்று பாராமல் கையில் ஏந்தியவாறு போக்குவரத்து சிக்னல்களில் வலம் வருகின்றனர்.
இவர்கள் தினசரி தமிழக பகுதிகளில் இருந்து ஒரு கும்பலால் வேனில் அழைத்து வரப்பட்டு ஒவ்வொரு சிக்னல்களிலும் இறக்கப்படுகின்றனர். தொடர்ந்து இரவு 8:00 மணி வரை பிச்சையெடுக்கின்றனர்; கிடைத்ததை சாப்பிடுகின்றனர். இவர்கள் மீண்டும் வேனில் அழைத்து செல்லப்படுகின்றனர். தினசரி இது தொடர்ந்து நடக்கிறது.
நாள் முழுவதும் வெயில் என்றும் பாராமல் கையில் வைத்துக்கொண்டு அலைவதால் குழந்தைகளின் உடல்நலம் தான் பாதிக்கப்படுகிறது. இச்சூழலில் வளர்ந்தால் பிச்சையெடுத்தலில் கிடைக்கும் வருமானமே போதுமானது என்ற மனநிலைக்கு நாளடைவில் குழந்தைகள் தள்ளப்படுவர். அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
குடும்ப சூழலால் பிச்சை எடுக்கிறார்களா, தொழிலாக மாற்றி, கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்களா என்பது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும். பிச்சையெடுக்கும் கும்பலிடம் சிக்கியுள்ள குழந்தைகளை உண்மையில் அவர்களுடைய குழந்தைகள் தானா என்று போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அக்குழந்தைகளை மீட்டு அவர்களின் கல்வி உள்ளிட்ட மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.