/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் கரையேறுவார்களா சுயேச்சைகள் குழப்பத்தில் தவிக்கும் அரசியல் கட்சிகள்
/
மீண்டும் கரையேறுவார்களா சுயேச்சைகள் குழப்பத்தில் தவிக்கும் அரசியல் கட்சிகள்
மீண்டும் கரையேறுவார்களா சுயேச்சைகள் குழப்பத்தில் தவிக்கும் அரசியல் கட்சிகள்
மீண்டும் கரையேறுவார்களா சுயேச்சைகள் குழப்பத்தில் தவிக்கும் அரசியல் கட்சிகள்
ADDED : செப் 07, 2025 12:02 AM
புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வரும் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடப் போகிறார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது.
புதுச்சேரியில் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதில் உருளையன்பேட்டையில் நேரு, முத்தியால்பேட்டையில் பிரகாஷ் குமார், உழவர்கரையில் சிவசங்கர், திருபுவனையில் அங்காளன், திருநள்ளாரில் பி..ஆர். சிவா, ஏனாமில் கொல்லப்பள்ளி சீனிவாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களில் நேரு, பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், ஆகியோர் என்.ஆர்.காங்.,கட்சிக்கும், அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாஸ் ஆகியோர் பா.ஜ.,விற்கும் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இவர்களுக்கு எந்த கட்சியில் 'சீட்' கிடைக்கும் என்ற குழப்பம் நிலவி வருகிறது. தற்போது இவர்கள் ஆதரவளித்து வரும் கட்சிகளில் இவர்களுக்கு 'சீட்' கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
மேலும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், அமைச்சர் ஜான்குமார், உள்ளிட்ட ஒரு சில எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை சில தொகுதிகளில் செய்து வருகின்றனர். எந்தக் கட்சியிலும் 'சீட்' கிடைக்காதவர்கள் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அணியில் நிற்கலாம் என்ற ஒரு தகவல் பரவி உள்ளது.
மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.,வான நேரு தனிக்கட்சி துவங்கி வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு தனியாக நிற்கலாம் என்ற ஐடியாவும் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ., என்.ஆர்.காங்., தி.மு.க., காங், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.,க் கள் வரும் தேர்தலில் தங்களுக்கு கூட்டணியால் 'சீட்' கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் தங்களுக்கு தேர்தல் நேரத்தில் 'சீட்' கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சியில் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கு ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அதனால் வரும் தேர்தலில் எந்த கட்சியில் எந்த வேட்பாளர் நிற்கப் போகிறார் என்று கேள்வி அனைத்து கட்சியிலும் உலா வருகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம்.