நகரமைப்பு குழுமத்தில் காலிப்பணியிடம் நிரப்பப்படுமா?: ஸ்தம்பிக்கிறது நகர வளர்ச்சி
நகரமைப்பு குழுமத்தில் காலிப்பணியிடம் நிரப்பப்படுமா?: ஸ்தம்பிக்கிறது நகர வளர்ச்சி
UPDATED : செப் 20, 2026 07:28 PM
ADDED : செப் 20, 2026 07:04 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகரமைப்பு குழுமத்தில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் திட்டமிடப்பட்ட நகர வளர்ச்சி, மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் மிக முக்கியப் பங்காற்றும் அமைப்பாக பி.பி.ஏ., எனும் புதுச்சேரி நகரமைப்பு குழுமம் திகழ்கிறது. இருப்பினும், அண்மை காலமாக போதிய பணியாளர்கள் இன்றி, முக்கியமான பணியிடங்கள் அனைத்தும் காலியாக இருப்பதால் இக்குழுமம் கடுமையான நிர்வாகச் முடக்கத்தைச் சந்தித்து வருகிறது.
நகரமைப்பு குழுமத்தில் ஒரு உறுப்பினர் செயலர் மட்டுமே பணியில் உள்ளார். நகரமைப்பின் முதுகெலும்பாக விளங்க வேண்டிய ஜூனியர் டவுன் பிளானர் பதவிகள் அனுமதிக்கப்பட்ட 6 இடங்களிலும் ஒருவர் கூட நிரந்தரப் பணியாளராக இல்லை. இதனால், கடந்த நான்கு வருடங்களாக 2 டவுன் பிளானிங் அசிஸ்டன்ட்கள் கூடுதல் பொறுப்பாகவே இந்தப் பணிகளைக் கவனித்து வரும் அவல நிலை நீடிக்கிறது.
அதேபோல, டவுன் பிளானிங் அசிஸ்டன்ட் பதவிக்கு அனுமதிக்கப்பட்ட 10 இடங்களில், 5 இடங்கள் மட்டுமே பி.பி.ஏ., அமைப்பின் பணியாளர்களால் நிரப்பப்பட்டுள்ளன; 4 இடங்கள் பிற துறைகளிலிருந்து டெபுடேஷன் எனும் மாற்றுப் பணி மூலம் தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, கள ஆய்விற்கும் வரைபடங்களைச் சரிபார்ப்பதற்கும் அத்தியாவசியமான 11 வரைவாளர் பணியிடங்களும், 12 ஹெல்பர் பணியிடங்களும் 100 சதவீதம் முற்றிலுமாக காலியாகவே கிடக்கின்றன. வரைவாளர் பணியிடங்கள் அனைத்தும் காலியாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் மனை வரைபடங்கள் மற்றும் கட்டடப் பிளான்களைச் சரிபார்க்கும் பணி முடங்கியுள்ளது. இதனால் கட்டட அனுமதி பெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூனியர் டவுன் பிளானர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கீழ்நிலை அலுவலர்களே பல ஆண்டுகளாகக் கூடுதல் பொறுப்புகளைச் தோளில் சுமந்து வருகின்றனர். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவதுடன், நகரத்திற்கான தொலைநோக்குத் திட்டமிடுதலில் பெரும் தொய்வை ஏற்படுத்துகிறது.
நேரடி கள ஆய்வு மேற்கொள்வதற்கும், அனுமதி பெறாத கட்டுமானங்களைக் கண்காணிப்பதற்கும் உதவிப் பணியாளர்கள் 12 பேரும் இல்லாததால், நகரில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் அனுமதியற்ற மனைகளை கண்காணிப்பதும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடு கட்ட மனை ஒப்புதல் பெற விரும்பும் எளிய மக்கள் முதல், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கட்ட விரும்புவோர் வரை, பி.பி.ஏ.,வில் மனுக்கள் கொடுத்து காத்திருகின்றனர். ஆனால் மனுக்கள் தேங்கிக் கிடப்பதால் கடுமையான சிரமங்களுக்கும் பொருளாதார இழப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
புதுச்சேரியின் திட்டமிட்ட நகர வளர்ச்சியைச் சீரமைக்கவும், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றவும் போர்கால அடிப்படையில் அரசு களத்தில் இறங்க வேண்டும். காலியாக உள்ள வரைவாளர், ஹெல்பர் மற்றும் ஜூனியர் டவுன் பிளானர் உள்ளிட்ட அனைத்துக் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நேரடி நியமனம் அல்லது துறை சார்ந்த பணி உயர்வின் மூலம் நிரப்ப புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
