ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் மாணவர் சேர்க்கை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் மாணவர் சேர்க்கை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 20, 2026 06:11 PM
புதுச்சேரி: ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.எஸ்சி., அலைடு ஹெல்த் சயின்சஸ் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்சி., செவிலியர் படிப்பில் பெண்களுக்கு 85 சீட்டுகள், ஆண்களுக்கு 9 சீட்டுகள் என, மொத்தம் 94 இடங்கள் உள்ளன.
இதுமட்டுமின்றி மருத்துவ ஆய்வக அறிவியல், அவசரகால மருத்துவ தொழில்நுட்பம், அனஸ்தீசியா தொழில்நுட்பம், ஆப்டோமெட்ரி, கார்டியாக் லேப், டயாலிசிஸ், கதிரியக்க தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 வகையான சிறப்புப் படிப்புகள் அடங்கும். மொத்தம் 191 இடங்களுக்குச் சேர்க்கை நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பிக்க நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். வரும் 28ம் தேதி மாலை 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 9ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தகுதி பட்டியல் வெளியிடப்படும். நேரடி கலந்தாய்வு மற்றும் சேர்க்கை அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கிறது. சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அம்மாதமே 30ம் தேதி துவங்குகிறது. தகுதியுடைய மாணவர்கள் ஜிப்மர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.jipmer.edu.in மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நீட் மதிப்பெண் சான்றிதழ், புகைப்படங்கள், கையொப்பம் மற்றும் தேவையான வகுப்பு, இருப்பிடச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் தகவல்களுக்கு ஜிப்மர் இணையதளத்தைப் பார்வையிடலாம்.
