தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிக்குமா. வரிந்து கட்டும் அரசியல் கட்சிகளால் எதிர்பார்ப்பு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிக்குமா. வரிந்து கட்டும் அரசியல் கட்சிகளால் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 13, 2026 10:16 PM
ADDED : செப் 13, 2026 08:32 PM

புதுச்சேரி: இடைத்தேர்தல் அறிவிப்பால், தட்டாஞ்சாவடி தொகுதி களை கட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் இறங்கியுள்ளதால் ஓட்டு பதிவில் சாதனை நிகழும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலம் இதுவரை, 9 இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. கடந்த, 1987 ம் ஆண்டு பாகூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலே, ஓட்டுப்பதிவு சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது.
அன்றைய தேர்தலில் கிராமப்புற மக்கள் திரளாகத் திரண்டு வந்து ஓட்டளித்ததால் 87.75 சதவீதம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சகட்ட ஓட்டுப்பதிவு பதிவானது. இன்றுவரை புதுச்சேரி இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவே முறியடிக்கப்படாத சாதனையாக நீடிக்கிறது.
இதற்கடுத்தபடியாக கடந்த, 2016, ல் நடைபெற்ற நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் 85.76 சதவீத ஓட்டுப்பதிவுடன் இரண்டாம் இடத்தையும் கடந்த, 2011, ல், நடைபெற்ற இந்திரா நகர் இடைத்தேர்தல், 83.51 சதவீத ஓட்டுப்பதிவுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
கடந்த, 1972, ல் நடந்த அரியாங்குப்பம் இடைத்தேர்தல், 82 சதவீத ஓட்டுகள் பெற்று நான்காம் இடத்தையும், 1998, ல் நடந்த ஊசுடு 80.96 சதவீத ஓட்டுப்பதிவுடன் ஐந்தாம் இடத்தையும், 2000, ல் நடந்த ஏனாம் இடைத்தேர்தல், 78.48 சதவீத ஓட்டுப்பதிவுடன் ஆறாம் இடத்தையும் பிடித்தன.
கடந்த, 2019 ல் நடைபெற்ற தட்டாஞ்சாவடி(77.32 சதவீதம்) மற்றும் காமராஜ் நகர் (69.43 சதவீதம்) இடைத்தேர்தல்கள் அடுத்தடுத்த நிலைகளைப் பெற்றன.
புதுச்சேரி வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக கடந்த, 1999 ம் ஆண்டு புஸ்சி தொகுதி இடைத்தேர்தலில் வெறும், 58.85 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. ஆனால், வரவிருக்கும் இந்த இடைத்தேர்தல் தட்டாஞ்சாவடி தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இடைத்தேர்தல் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அரசியல் கட்சிகள் தங்களின் கவனிப்புகளையும் காய்களையும் நகர்த்தத் தொடங்கிவிட்டன.
வரும், அக்., 6 ம் தேதி ஓட்டுபதிவு நடைபெறவுள்ள சூழலில், அரசியல் கட்சியினர் வீதி வீதியாக சென்று , 'மறக்காமல் வந்து ஓட்டுபோடுங்க.,'என உருக்கமான வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சில, 100 ஓட்டுகள் கூட வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால், ஒரு ஓட்டை கூட விடாமல், அறுவடை செய்து தங்களின் வெற்றிக்கணக்கில் சேர்க்கும் பொருட்டு, கட்சிகள் நிர்வாகிகளுக்குத் தனித்தனி அசைன்மெண்ட் ஒதுக்கியுள்ளன.
அவர்களும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து, வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் முழு மூச்சில் இறங்கியுள்ளனர்.
வாக்காளர்கள் வெளியூரில் வசித்தாலும் கூட, அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'மறக்காமல் வரும், அக்.6 ம் தேதி வந்து நம்ம வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். அதற்கான பயண செலவை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம்,' என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் இத்தகைய தீவிரமான கவனிப்புகளாலும் களப்பணியினாலும், இந்த இடைத்தேர்தலில் ஓட்டுபதிவு சதவீதம் பாகூர் இடைத் தேர்தலை தாண்டி உச்ச சாதனை படைக்குமா என்று எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது. இதற்கான விடை இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.
