அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு காலத்தோடு பேச்சுவார்த்தை... துவங்கப்படுமா? ஜவ்வாக இழுக்கும் கவுன்சிலிங் நடைமுறையால் விரக்தி
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு காலத்தோடு பேச்சுவார்த்தை... துவங்கப்படுமா? ஜவ்வாக இழுக்கும் கவுன்சிலிங் நடைமுறையால் விரக்தி
UPDATED : மே 31, 2026 07:47 PM
ADDED : மே 31, 2026 07:31 PM
புதுச்சேரி: இந்தாண்டாவது தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் விரைவாக பேச்சு வார்த்தை நடத்தி, அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாணவர்களின் உயர்கல்வி கனவை தீர்மானிக்கும் முக்கிய அமைப்பாக சென்டாக் கலந்தாய்வு விளங்கி வருகிறது. இந்த ஆண்டும் நீட் அல்லாத பிற படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி, பொதுச் சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். சென்டாக் நிர்வாகம் இந்த முறை விண்ணப்ப செயல்முறைகளை விரைவாகத் தொடங்கியுள்ளது என்றாலும், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஒருவித அச்சமும் விரக்தியும் தொற்றிக் கொண்டுள்ளது.
அதற்கு முக்கியக் காரணம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த ஆண்டாவது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பேச்சு வார்த்தை உரிய நேரத்தில் முடிவடையுமா அல்லது வழக்கம்போல ஜவ்வாக இழுக்குமா என்ற கேள்வி தான் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
அண்டை மாநிலமான தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை முன்கூட்டியே திட்டமிட்டபடி துல்லியமாகத் தொடங்கி விடுகிறது. ஆனால், மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் வெறும் மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமே உள்ளன. இவற்றிடமிருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவது அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் கடைசி நிமிடம் வரை இந்த இடங்களுக்கான பேச்சு வார்த்தையை தள்ளிப்போடுவது புதுச்சேரி அரசின் வாடிக்கையாகிவிட்டது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த பேச்சு வார்த்தைகள் இழுத்தடிக்கப்படுவதால், ஒட்டுமொத்த சென்டாக் கலந்தாய்வு நடைமுறையும் ஒவ்வொரு ஆண்டும் முடங்கிப் போகிறது.
மருத்துவக் கலந்தாய்வு என்பது வெறும் எம்.பி.பி.எஸ்., சீட்டுகளோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. பெரும்பாலான டாப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் முதல் இலக்கு மருத்துவப் படிப்பாகவே இருக்கிறது. மருத்துவக் கலந்தாய்வு முடிந்து, அதில் இடம் கிடைக்காத பட்சத்தில் தான் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர்.
அதன் பின்னரே துணை மருத்துவப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை முழுமையடைகிறது. ஆனால், எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வே மாதக்கணக்கில் தாமதமாவதால், மற்ற படிப்புகளுக்கான இடங்களும் நிரப்பப்படாமல் தேக்கமடைகின்றன. இதனால் மற்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் தங்களுக்குப் பிடித்த கல்லுாரிகளில் சேர முடியாமல், கலந்தாய்வு எப்போது முடியும் என்று மாதக்கணக்கில் காத்திருந்து விரக்தியின் விளிம்பிற்கே செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு தாமதமாவதற்கு அரசுத் தரப்பில் பல்வேறு சாக்குபோக்குகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தாண்டாவது தேசிய கலந்தாய்வு கமிட்டி இன்னும் அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடவில்லை. அகில இந்திய அளவிலான கட்-ஆப் மதிப்பெண்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவை போன்ற அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி காலத்தைக் கடத்துவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
தேசிய அளவிலான அட்டவணை வருவதற்கு முன்பே, புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்களை அழைத்து, சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு ஒதுக்கீட்டு இடங்களை முன்கூட்டியே இறுதி செய்து வைத்திருக்க முடியும்.
விண்ணப்பங்களை விரைவாக வாங்கிய அரசு, கலந்தாய்வையும் அதே வேகத்தில் நடத்த வேண்டும். தனியார் கல்லுாரிகளுடன் முன்கூட்டியே பேசி இடங்களை உறுதி செய்யாவிட்டால், எங்களுடைய பிள்ளைகளின் ஓராண்டு உழைப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும். இதுவே புதுச்சேரி பெற்றோர்களின் குமுறலாக உள்ளது.
தேசிய அட்டவணைக்கு காத்திருக்காமல், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையையும், கட்டண விகிதத்தையும் கலந்தாய்வு தொடங்கும் முன்பே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சென்டாக் கலந்தாய்வுக்கான பிரத்யேக கால அட்டவணையை உருவாக்கி, எந்தக் காரணத்தை கொண்டும் அதில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் விரக்தி நீங்கி, அவர்களின் உயர்கல்விக் கனவு நனவாகும்.
