/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பரிசு தொகை கிடைக்குமா?...எதிர்பார்ப்பு: கவர்னர்-முதல்வர் சந்திப்பால் மக்கள் ஆவல்
/
பொங்கல் பரிசு தொகை கிடைக்குமா?...எதிர்பார்ப்பு: கவர்னர்-முதல்வர் சந்திப்பால் மக்கள் ஆவல்
பொங்கல் பரிசு தொகை கிடைக்குமா?...எதிர்பார்ப்பு: கவர்னர்-முதல்வர் சந்திப்பால் மக்கள் ஆவல்
பொங்கல் பரிசு தொகை கிடைக்குமா?...எதிர்பார்ப்பு: கவர்னர்-முதல்வர் சந்திப்பால் மக்கள் ஆவல்
ADDED : ஜன 07, 2026 05:20 AM

புதுச்சேரி: தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் ரேஷன் கார்டிற்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்துகவர்னருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதால், மக்களிடையே எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நிவாரணங்கள் வழங்குவதிலும் பிற மாநிலங்களுக்கு, புதுச்சேரி அரசு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அதேபோன்று, தீபாவளி பண்டிகைக்கு தொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2021ல் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பொறுப்பேற்றதும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சை அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலைப் பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. 2024, 2025ம் ஆண்டுகளும் 750 ரூபாய், பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரை 2 கிலோ, எண்ணெய் 2 லிட்டர், கடலை பருப்பு 1 கிலோ, ரவை, மைதா தலா அரை கிலோ மற்றும் சிவப்பு ரேஷன் கார்டிற்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற கார்டிற்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர், கவுரவ ரேஷன் கார்டு நீங்கலாக மீதமுள்ள 3.47 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.750 மதிப்பில் அரிசி - 4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசிபருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சன்பிளவர் சமையல் எண்ணெய்-1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டிற்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான டோக்கன் நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
நலத்திட்டங்கள், நிவாரணம் மற்றும் விழா பரிசு தொகுப்புகள் வழங்குவதில் புதுச்சேரியை பார்த்து, தமிழக மக்கள் ஏங்கிய நிலை மாறி, தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு புதுச்சேரி மக்களிடையே பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை விரைவில் அறிவிக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இதனால், எப்படியும் பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு, புதுச்சேரி அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தை போன்று பொங்கல் பரிசு தொகை வழங்க நிதி ஆதாரமும் இல்லை. அதனால், வேறு திட்ட நிதியை, பொங்கல் பரிசு தொகைக்கு மாற்றி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு கவர்னரின் அனுமதி தேவை.
இந்நிலையில் நேற்று மதியம், லோக் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடைபெற்ற தேசிய இளையோர் விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். பின்னர் கவர்னருடன், முதல்வர் ரங்கசாமி ரேஷன் கார்டிற்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கவர்னரை, முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதால், எப்படியும் பொங்கல் பரிசு தொகை கிடைக்கம் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

