/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அபார்' அடையாள எண் திட்டத்தில் புதுச்சேரி... இணையுமா; மாநில பள்ளி மாணவர்களுக்கு தனித்துவம்
/
'அபார்' அடையாள எண் திட்டத்தில் புதுச்சேரி... இணையுமா; மாநில பள்ளி மாணவர்களுக்கு தனித்துவம்
'அபார்' அடையாள எண் திட்டத்தில் புதுச்சேரி... இணையுமா; மாநில பள்ளி மாணவர்களுக்கு தனித்துவம்
'அபார்' அடையாள எண் திட்டத்தில் புதுச்சேரி... இணையுமா; மாநில பள்ளி மாணவர்களுக்கு தனித்துவம்
ADDED : பிப் 17, 2024 05:06 AM

புதுச்சேரி : புதிய கல்வி கொள்கையின்படி தனித்துவ 'அபார்' அடையாளஅட்டை திட்டத்தை விரைவில் செயல்படுத்தி, புதுச்சேரிமாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
நாட்டில் உள்ள பொதுமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது போல நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திட்டம், கடந்த 2020-ல் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்களின் அனுமதியும் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்கு 'அபார்' (ஆட்டோமேட்டடு பெர்மனன்ட் அகாடமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி) எனப் பெயரிடப்பட் டுள்ளது.
இது தொடர்பான அறிவிக்கை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெற்றோர்களை அழைத்துப் பேசி அனுமதி பெறும் நடவடிக்கையை துவங்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்று அடையாள அட்டை பணியை பல மாநிலங்கள் துவங்கியுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் ஏற்கனவே சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறியுள்ளன. எனவே 'அபார்' அட்டை வழங்கினால், மாணவர்களுக்கு அனைத்து விதங்களிலும் பயனுள்ளதாக இருக்கும்.
இணைப்பது சுலபம்
புதுச்சேரி மாநிலத்தில் 'அபார்' அட்டை வழங்கு தற்கான அடித்தளம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தனித்துவமான (யூ.டி.ஐ.எஸ்.இ.,) எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்லும்போது இந்த எண்கள் டி.சி.யுடன் குறிப்பிட்டு அளிக்கப்படுகின்றன.
இந்த எண்களுடன் புதுச்சேரி மாணவர்களின் ஆதார் எண்கள் 90 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளன.ஆதார் எண் இருந்தால் 'அபார்' தனித்துவ அடையாள அட்டை வழங்குவதும் வெகு சுலபம்.
புதுச்சேரியில் 'அபார்' அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவது வெகு சுலபமானது தான்.
ஆனால் சில பள்ளிகள் யூ.டி.ஐ.எஸ்.இ., திட்டத்தின் கீழ் இன்னும் முழுமையாக தங்களது பள்ளி மாணவர்களின் தகவல்களை பகிரவில்லை.
இதன் காரணமாக யூ.டி.ஐ.எஸ்.இ., திட்டத்தின் தனித்துவ எண் கள் வழங்கப்படாமலும், 'அபார்' எண் தனித்துவ அடையாள அட்டையும் வழங்கப்படாமலும் உள்ளன. இரண்டு திட்டமும் முழுமை பெறாமல் உள்ளது.
தாமதம் செய்யும் இப்பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி, யூ.டி.ஐ.எஸ்.இ., எண்களை அளிக்க செய்ய வேண்டும். அதன் பிறகு தகவலியல் மையம் வாயிலாக தற்காலிக அபார் எண்கள் உருவாக்கி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்து அபார் தனித்துவ எண்களை மாணவர்களுக்கு சுலபமாக வழங்கலாம்.
என்ன சிறப்பு
இந்த திட்டம் 'ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை' எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த 'அபார்' அட்டையில் அந்த மாணவரின் கல்வி விவரங்களும், கூடுதல் திறமைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். 'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் ஆதார் தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் உதவும்.
இந்த 'அபார்' அட்டைகளின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இந்த விவரங்கள் அரசு நிறுவனங்கள் தவிர வேறு எவருக்கும் பகிரப்படாது என பெற்றோர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைக்காக பெற்றோர் அளித்த அனுமதியை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.